Published : 13 Aug 2021 08:49 PM
Last Updated : 13 Aug 2021 08:49 PM
கரோனா பெருந்தொற்றால் எதிர்காலத்தை புதிதாக திட்டமிடுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு, புதுச்சேரி கிளை ஏற்பாடு செய்த ‘‘75-வது ஆண்டில் சுதந்திர இந்தியா – புதுச்சேரி 2022 ஒரு சிறப்புப் கண்ணோட்டம்’’ என்ற இணையவழி கருத்தரங்கம் இன்று(ஆக 13) நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். இந்த தருணத்தில் நம்முடைய கடந்த கால சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து நாம் பேச வேண்டியது அவசியம்.
இந்தியாவை 2022-க்குள் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற சிஐஐ போன்ற நிறவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இதனால் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வேகமாக முன்னேற முடியும்.
கரோனா பெருந்தொற்று வளர்ச்சி இலக்குகளை நோக்கிய நம்முடைய பயணத்தை சிறிது மந்தப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் நம்மை துரிதப்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளித்திருக்கிறது.
எதிர்காலத்தை புதிதாக திட்டமிடுவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளதால், 2047-ஐ நோக்கி முன்னேறுவதற்கான பார்வையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரே நாடாக ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்படும் அதே வேளையில், மாநிலங்களுக்கான வாய்ப்பையும் நாம் இழந்தவிடக் கூடாது. இந்தியா தனித்துவமான புவியியல், கலாச்சாரம் மற்றும் இனங்களின் சங்கமமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தனித்துவமான தேவைகளும் எதிர்ப்பார்ப்புகளும் இருக்கின்றன.
இந்தியா முழுவதும் ஒன்றுபட்டு முன்னேற இவற்றைச் சந்திக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் புதுச்சேரியை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான தீர்க்கமான பார்வை நமக்கு வேண்டும். 2047 -ல் இந்த மாநிலத்தை நாம் எப்படிப் பார்க்க விரும்புகிறோம். தேசிய வளர்ச்சியில் நம்முடைய பங்களிப்பு என்ன. தனித்துவம் என்ன.
அதே போல, நம்முடைய குழந்தைகள் குடும்பத்தினரின் ஆரோக்கியம், கல்வி, சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவற்றில் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் என்ன. என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நம்முடைய தேவைகள் நமக்குத் தெரிந்தால் நாம் உறுதியாக செயலாற்ற முடியும்.
உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், வேளாண் துறை மேம்பாடு, சிறு-குறு தொழில்களை வலுப்படுத்துதல் போன்றவை அடிப்படையானவை. புதுச்சேரியை நிலையான வளர்ச்சிப் பாதைக்கு மாற்ற சரியான உத்திகளை நாம் கையாள வேண்டும்.
பசுமையான, புதுமையான, பசி இல்லாத, சுற்றுச்சூழல் தூய்மையான, மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் புதுச்சேரியை- நோய்கள் இல்லாத புதுச்சேரியை சிஐஐ போன்ற நிறுவனங்களின் உதவிபோடு ஏற்படுத்த முடியும்.
கரோனா இரண்டாவது அலையை மிக கவனமாக எதிர்கொண்டோம். மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் தொலை நோக்கு திட்டத்திற்கேற்ப தன்னிறைவு பெற்ற, வளமான, வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நம்மால் சாதிக்க முடியதது ஏதும் இல்லை. புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது 75-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’’இவ்வாறு ஆளுநர் தமிழிசை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT