Published : 13 Aug 2021 06:53 PM
Last Updated : 13 Aug 2021 06:53 PM

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா சாகுபடி அழிந்துவிடும்: அய்யாக்கண்ணு

திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்த பிறகு வெளியே வந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள்.  படம் – இரா.தினேஷ்குமார். 

திருவண்ணாமலை 

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால், டெல்டா சாகுபடி அழிந்துவிடும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யக்கண்ணு தெரிவித்தார்.

திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷை சந்தித்து மாவட்டத்தில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி இன்று(13-ம் தேதி) காலை அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அரசு அறிவித்தபடி ரூ.1,960-க்கு விற்பனை செய்ய வேண்டிய 100 கிலோ நெல் மூட்டையை ரூ.900 – ரூ.1000 வரை என விலையை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்குகின்றனர். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 இடங்களில் திறந்து, மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு கிலோ ரூ.19.60 மற்றும் மாநில அரசின் மானியத் தொகை 70 பைசாவையும் சேர்த்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவும், விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கக் கூடாது என ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராமத்தில் குளம் அமைந்துள்ள பகுதி, சிப்காட்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த குளத்தை நம்பி மக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். குளத்தை கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளோம். வீடுகளும் பாதிக்கப்படுகிறது. விவசாயத்துக்கு யூரியா வழங்குவதிலும் தவறு நடைபெறுகிறது என தெரிவித்துள்ளோம். எங்களது கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வியாபாரிகளின் குறுக்கீடு இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்மைத் துறைக்கு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது மகிழ்ச்சி. விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கவும், தமிழகம் முழுவதும் 6 கி.மீ., தொலைவுக்கு ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான அறிவிப்பு இடம் பெறும் என நம்புகிறோம். ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500, ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். விவசாயிகளை காப்பாற்ற, ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த அறிவிப்பும் இடம் பெற செய்ய வேண்டும்.

மரபணு விதைகள் கூடாது

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை வழங்கக்கூடாது. இதனால் ஆண் மற்றும் பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது. 5 ஆண்டுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு குறித்து பிரச்சாரம் செய்தார்கள். இப்போது செய்வதில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தமிழகத்தில் இறக்குமதி செய்யப்படாது என்ற அறிவிப்பும் இடம் பெற வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால், டெல்டா சாகுபடி அழிந்துவிடும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற அடைமொழி போய்விடும். டெல்டா மட்டும் இல்லாமல் தமிழகத்தின் அனைத்து திசைகளையும் வளமான பூமியாக மாற்ற வேண்டுகிறோம். அனைத்து பிள்ளைகளுக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும்.

ஆலைகளிடம் தேர்தல் நிதி வசூல்

மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்த விலையை கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்காத தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, தேர்தல் காலத்தில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். கோதாவரி – காவிரி நதிகளை இணைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கோதாவரியில் 2 ஆயிரம் டிஎம்சி தண்ணீர், கடலில் வீணாக கலக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 300 டிஎம்சி தண்ணீர், காவிரிக்கு கிடைக்கும். கர்நாடக மாநிலத்துக்கு 200 டிஎம்சி தண்ணீர் தேவை என கூறகிறார்கள். அவர்களின் தேவைக்கு போக மீதமுள்ள 100 டிஎம்சி கிடைத்தால் பாலாறு, தென்பெண்ணையாறுக்கு நீர் வரத்து அதிகரித்து வளமான பகுதியாக மாறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x