Published : 13 Aug 2021 05:52 PM
Last Updated : 13 Aug 2021 05:52 PM
திமுக அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் பல அறிவிப்புகள், தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டு, நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை ஏறத்தாழ 59 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிற நிலையில், கடுமையான நெருக்கடியில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான பல்வேறு அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக 2.63 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ. 3 வரியை குறைத்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதன்மூலம் தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை முதல் நிதிநிலை அறிக்கையிலேயே நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வரை பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் சுயஉதவிக் குழுக்களின் மூலமாக பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். அக்குழுவினருக்கு வழங்கப்பட்ட ரூ. 2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கு ரூ. 20,000 கோடி புதிதாகக் கடன் வழங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குடிசையில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பது முத்தமிழறிஞர் கலைஞரின் கனவாகும். அந்த கனவை நிறைவேற்றும் வகையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு ரூ. 3,800 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்களாக இருந்த வேலை வாய்ப்பை, 150 நாட்களாக உயர்த்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 25 கோடி வேலை நாட்கள் உறுதி செய்யப்பட்டு, ஒருநாள் ஊதியம் ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் சுயச்சார்பு நிலையை அடைய பெரும் உதவியாக இருக்கும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிற இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றுக்கான மானியத்தொகை ரூ. 19,872 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் மீது இந்த அரசுக்கு இருக்கிற அக்கறையைக் காட்டுகிறது.
எந்த சட்டப்பேரவை தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் இல்லையோ, அங்கு ரூ. 3 கோடி செலவில் அமைப்பதென அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்கள் தங்கள் விளையாட்டுத் திறனை அதிகப்படுத்துவதற்கு இந்த அறிவிப்பு பெரும் பயனைத் தரும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மின்மிகை மாநிலம் என்று அடிக்கடி பெருமையாகக் கூறிக் கொண்டதை அனைவரும் அறிவார்கள். ஆனால், ஆண்டுதோறும் 2,500 மெகாவாட் மின்சாரத்தை தனியார் மின் சந்தையின் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்கியதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டிப் பேசியது கடந்தகால ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்துகிறது.
வருகிற காலங்களில் மின் உற்பத்தியை சுயமாகப் பெருக்குவதற்குத் தமிழக அரசு தீவிரமான நடவடிக்கையை எடுக்கும் என்று உறுதி கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை பணிகள் விரைவுபடுத்தப்படும். கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். சென்னை விமான நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வர இருக்கிற கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை பெருநகர மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
தமிழக அரசு விரைவில் புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் என்று கூறியதோடு, ரூ. 32,591 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கற்பித்தல் முறையில் மாற்றம் செய்து, பள்ளிகளில் மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாணவர்களிடையே சிந்திக்கும் திறனை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கல்வியின் திறன் குறைந்து வந்தது குறித்து அனைவரிடையேயும் கவலை இருந்து வந்தது. அதனால் தான் மாணவர்கள் நீட் தேர்வுகளில் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தகைய நிலையை போக்குகிற வகையில் கல்வி கற்பிக்கும் முறையில் அடிப்படை மாற்றங்கள் செய்து,
ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை வளர்க்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது கட்டமைப்பு வசதிகள் தான்.
இதை உரிய முறையில் செய்யவில்லையெனில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைக் காண முடியாது. அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறைக்கு மொத்த ஒதுக்கீடாக ரூ. 17,899 கோடி ஒதுக்கியிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. இதன்மூலம் சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையை 6 வழி சாலையிலிருந்து 8 வழி சாலையாக மாற்றுவது மிகுந்த வரவேற்புக்குரிய ஒன்று. மேலும் 2,200 கி.மீ. சாலைகளை அகலப்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடியில் போக்குவரத்துக் கழகங்கள் சிக்கியிருந்தாலும், ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.624 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆயிரம் தடுப்பணைகள், கதவணைகள் 10 ஆண்டுகளில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ. 6,607 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. குளங்கள் தூர் வார 111 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்களை உயர்த்துவதற்கு வழிவகுக்கும். அதேபோல, உணவு மானியத்திற்காகக் கடுமையான நிதி நெருக்கடி இருக்கிற நிலையிலும் ரூ.8,437 கோடி உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ரூ.4,142 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் குடும்ப நலனுக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சியில் மிகுந்த அக்கறையோடு கிராமப்புற மக்கள் வீடு கட்டுவதற்கு அரசு மானியம் ரூ. 2.76 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல, 1.27 கோடி குடும்பங்களுக்குத் தரமான குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்த்து ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு தி.மு.க. அரசு பொறுப்பேற்று, முதல் நிதிநிலை அறிக்கையின் மூலம் தமிழகத்தை
தலைநிமிர வைக்கும் தொலைநோக்கு திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் திட்டங்களினால் தனிநபர்கள் பயனடைவதை விட ஒட்டுமொத்த மக்களும் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை மிகுந்த தொலைநோக்கு பார்வையோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், அவரது நோக்கம் நிறைவேற பெரும் துணையாக இருக்கிற ஆற்றல் மிகுந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT