Published : 13 Aug 2021 01:17 PM
Last Updated : 13 Aug 2021 01:17 PM

நடைமுறைப்படுத்த முடியாத திமுகவின் தேர்தல் வாக்குறுதி: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன் என்று எதிர்க் கட்சித் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு, அதிமுகவினருக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து வலியுறுத்தினார்.

எனினும் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு, வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''சட்டப்பேரவைத் தேர்தலின்போது 500-க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதியமைச்சர் அண்மையில் வெற்று அறிக்கையை வெளியிட்டார். ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் அதிமுக அரசு என்ன கூறுகிறதோ அதை ஒட்டுமொத்தமாக வெளியிட்டுள்ளனர். அதேபோல முந்தைய அரசு குறித்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை நிதியமைச்சர் கூறியுள்ளார்.

14-வது ஊதியக்குழு ஒரு குறிப்பிட்ட வரி. அது உத்தேச மதிப்பீடுதான் அதுவே வசூலிக்கப்பட வேண்டிய வரியாகாது. நிதியமைச்சர் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை விளம்பரம் தேட எடுத்த முயற்சி.

மூச்சுக்கு முன்னூறு தடவை பத்திரிகைச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் ஆனால் அவர் தலைமையில் இயங்கும் காவல்துறை கடந்த 9ஆம் தேதி 'நமது அம்மா' நாளிதழ் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது. சோதனையின்போது அலுவலக ஊழியர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அன்றைய பத்திரிக்கை அச்சடிக்கப்பட்ட முடியாமல் பத்தாம் தேதி நாளிதழ் வெளியாகவில்லை. பத்திரிக்கைச் சுதந்திரத்தை நசுக்கும் திமுகவைக் கண்டித்தும் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்''

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x