Published : 13 Aug 2021 10:48 AM
Last Updated : 13 Aug 2021 10:48 AM
பெட்ரோல், டீசல் வரிவிதிப்பு முறையில் கூட்டாட்சி தத்துவம் மீறப்பட்டுள்ளது என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
முதல்முறையாக காகிதம் இல்லாத மின்னணு வடிவில்பட்ஜெட் (இ-பட்ஜெட்) வெளியிடப்படுவதால், சட்டப்பேரவை கூட்டரங்கில் உறுப்பினர்கள் அனைவருக்கும் மேஜை கணினி, கையடக்க கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவை அலுவல்களை சபாநாயகர் கணினியை பார்த்து படித்தார். காகிதமில்லா இ-பட்ஜெட்டை எப்படி படிப்பது என்பது குறித்த வழிமுறைகளை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வழங்கினார்.
சிரமங்கள் இருப்பின் உடனுக்குடன் தொழில்நுட்ப பணியாளர்கள் சரிசெய்வர் எனவும் அவர் தெரிவித்தார். அச்சிடப்பட்ட பிரதிகள் தேவைப்படுவோர் அதனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். கையடக்க கணினியில் பிடிஎஃப் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது, மத்திய - மாநில உறவுகள் குறித்து பேசியதாவது:
"தேசிய அளவிலான நிகழ்வுகளால் தமிழக நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 15-வது நிதிக்குழு, ஜிஎஸ்டி செயல்பாடு சிக்கல்கள் ஆகியவையும் இதில் அடங்கும். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.
பெட்ரோல், டீசல் வரிவிதிப்பு முறையில் கூட்டாட்சி தத்துவம் மீறப்பட்டுள்ளது. மத்திய அரசின் வரிமுறை, மாநில அரசின் நிதியை திசைத்திருப்பி, கூட்டாட்சி முறைக்கு மாறாக உள்ளது. பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது.
வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும். கூட்டாட்சி நிதி வடிவம் ஒன்றை உருவாக்க ஆலோசனை குழு ஒன்றை அரசு நிறுவும். அனைத்து குடும்பங்களின் நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT