Published : 13 Aug 2021 10:33 AM
Last Updated : 13 Aug 2021 10:33 AM
'தலைநிமிரும் தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை, அரசு திட்டங்களாக இந்த பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
முதல்முறையாக காகிதம் இல்லாத மின்னணு வடிவில்பட்ஜெட் (இ-பட்ஜெட்) வெளியிடப்படுவதால், சட்டப்பேரவை கூட்டரங்கில் உறுப்பினர்கள் அனைவருக்கும் மேஜை கணினி, கையடக்க கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவை அலுவல்களை சபாநாயகர் கணினியை பார்த்து படித்தார். காகிதமில்லா இ-பட்ஜெட்டை எப்படி படிப்பது என்பது குறித்த வழிமுறைகளை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வழங்கினார்.
சிரமங்கள் இருப்பின் உடனுக்குடன் தொழில்நுட்ப பணியாளர்கள் சரிசெய்வர் எனவும் அவர் தெரிவித்தார். அச்சிடப்பட்ட பிரதிகள் தேவைப்படுவோர் அதனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். கையடக்க கணினியில் பிடிஎஃப் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
"திராவிட இயக்கத்துக்கு முன்னோடி நீதிக்கட்சி. இத்தகைய மகத்தான பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொள்கிறோம். திமுக வெளிப்படையான நிர்வாகம் செய்யும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப சேவையாற்ற காத்திருக்கிறோம்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி திருவுருவப்படம் நம்மை வழிநடத்துவதாக உணர்கிறேன். கருணாநிதி எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை தீட்டித்தந்துள்ளார். ஸ்டாலின், கருணாநிதியின் வாழ்த்தினை பெற்றுள்ளார்.
முதல்வர் வழிகாட்டுதல் இந்த பட்ஜெட்டில் முத்திரையை பதித்துள்ளன. பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. 'தலைநிமிரும் தமிழகம்' தொலைநோக்குத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை, அரசு திட்டங்களாக இந்த பட்ஜெட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட் இந்தாண்டின் மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே பொருந்தும். கரோனா தாக்கம், பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவுகள் அரசை பாதித்துள்ளன. 2022-23-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டுக்கு வலுவான அடித்தளம் அமைப்பதே நோக்கம்.
கடந்த அரசின் நிதி நிர்வாக தவறுகள், கடன் சுமைகள் பற்றி வெள்ளை அறிக்கை விளக்குகிறது. நிதிநிலைமையை சீர்செய்வது நங்கள் அளித்த முக்கிய வாக்குறுதி. ஒரே ஆண்டில் செய்ய முடியாத அளவுக்குக் கடுமையான பணி அது. 2-3 ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு. வல்லுநர்கள் கருத்து, உறுதியான நடவடிக்கை ஆகியவற்றை முதல்வர் வகுத்துள்ளார். எந்தவொரு சிக்கலையும் சரிசெய்வதற்கான முக்கிய பணி அதன் ஆழத்தை புரிந்துகொள்வதாகும். சிக்கலின் ஆழத்தை இந்த அரசு புரிந்துகொண்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை படிப்படியாக செயல்படுத்துவோம். முதல்வராக பொறுப்பேற்றதும் முக்கியமான 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்தார். எங்கள் நோக்கத்தையும் துரித செயல்பாட்டையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
கரோனா நிவாரணமாக 4,000 ரூபாய் வழங்கினோம். வாக்குறுதியில் குறிப்பிடப்படாத 14 அத்தியாவசிய பொருட்களும் வழங்கினோம்.
தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையை நாளை வேளாண் அமைச்சர் தாக்கல் செய்வார்.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ், 4,57,245 ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, 2,29,214 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என்ற உறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே முறையில் சிறப்பாக செயல்படுவோம்".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT