Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக முறைகேடாக ரேஷன் அரிசியை வாங்கும் நிறுவனங்கள்

திருப்பூர்

நியாயவிலைக் கடை அரிசி கடத்தப்பட்டு, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் சிலநிறுவனங்களின் உணவகங்களில் சமைக்கப்படுவது போலீஸாரின்விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருப்பூர் செரங்காடு பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், குடிமைப்பொருள் பறக்கும்படை வட்டாட்சியர் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள், செரங்காடு பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், சரக்கு வேன் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டுசெல்லப்படுவதை பறக்கும்படையினர் உறுதி செய்தனர். இதையடுத்து வேனில் இருந்த 7.5 டன் அளவிலான 150 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதில், திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்த பழனிசாமி (38) மற்றும் அவரது சரக்கு வாகன ஓட்டுநர் ஊத்துக்குளியை சேர்ந்த பிரகாஷ்(26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது:

கடந்த 6 மாத காலமாக ரேஷன்அரிசி கடத்தலில் பழனிசாமி ஈடுபட்டுள்ளார். ரேஷன் அரிசியை மொத்தமாக ஓரிடத்தில் வாங்கி வைத்து, அதனை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். மக்கள் வாங்கும் இலவச ரேஷன் அரிசியை ஒரு கிலோ ரூ. 5-க்கு அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளனர். அதன்பின்னர் திருப்பூர் மாநகர்மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கிலோ ரூ.13 முதல் ரூ. 15 வரைவிலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

அதேபோல், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் பின்னலாடை நிறுவனங்கள், நூற்பாலைகள் என பல்வேறு பகுதிகளுக்கு ரூ.15-க்கு அரிசியை மொத்தமாக விற்றுள்ளனர். ரேஷன்அரிசி, நிறுவனங்களில் உள்ள உணவகங்களுக்கு கடத்தப்படுகிறது.

நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் இந்த அரிசி மூலம் சமைக்கப்படுவதால், நிறுவனங்களுக்கான செலவும் பெருமளவு மிச்சமாகிறது. அதேபோல், கடத்தல் கும்பல்களும் அதிக லாபம் பார்க்கின்றனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.

திருப்பூர் சமூக ஆர்வலர் சே.பாலசுப்பிரமணியம் கூறும்போது, ‘‘திருப்பூரில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரியை நம்பி குடும்பங்கள் பல உள்ளன. நியாய விலைக்கடைகளில் தரமான அரிசி கிடைப்பதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் அரிசியை, பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பெற்று, அதனைக் கடத்தி நிறுவனங்களுக்கு விற்று பல மடங்கு லாபம் சம்பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற குற்றங்களில்ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x