Last Updated : 15 Feb, 2016 09:33 AM

 

Published : 15 Feb 2016 09:33 AM
Last Updated : 15 Feb 2016 09:33 AM

ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி தரும் வகையில் புதுச்சேரியில் புதிய நடைமுறையை கையாளும் அதிமுக

புதுச்சேரியில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், எதிர்க்கட்சி யான காங்கிரஸுக்கு நெருக்கடி தரும் வகையில் முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், பிரபலங் களை கட்சியில் இணைக்கும் புதிய நடைமுறையை அதிமுக கையாள தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வென்றன. ஆனால், அதிமுகவை கழற்றிவிட்டு சுயேச்சை எம்எல்ஏவான விஎம்சி சிவக்குமார் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் ரங்கசாமி. இதனால் ரங்கசாமி மீது கடும் கோபத்தில் இருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து மக்களவை தேர்தலிலும் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வென்றது. ஆனால், மாநிலங்களவை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், அதிமுக உறுப்பினராகி எம்.பி.யா னார். அதிமுகவுக்கு மாநிலங் களவையில் ஒரு சீட் அதிகமானது.

அதிமுக தனித்து போட்டி?

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக தனித்து போட்டியிடும் வகையில் தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக அதிமுக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தமிழக தேர்தல் நடைமுறைகளே புதுச்சேரியில் அதிமுக தலைமை பின்பற்றி வந்தது. கடந்த 1974, 1977க்கு பிறகு புதுச்சேரியில் கடந்த 39 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்தது. புதுச்சேரியை பொறுத்தவரை கட்சி செல்வாக் குடன், அத்தொகுதியில் போட்டி யிடும் நபரும் செல்வாக்கு உள்ள வராக இருந்தால்தான் வெல்ல முடியும். புதிய திட்டத்துடன் புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க அதிமுக தலைமை முடிவு எடுத்துள்ளது. பன்னீர்செல்வம் தலைமையிலான குழு இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி யிடும் அளவுக்கு தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களை கட்சியில் இணைக்கும் பணி நடக்கிறது.

திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏ எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ நடராஜன் இருவரும் அதிமுகவில் இணைந்தனர். அத்துடன் வணிகர் கூட்டமைப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏ விஎம்சி சிவக்குமார், விரைவில் அதிமுக வில் இணைவார் என தெரிகிறது.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கண்ணனை தங்கள் கட்சியில் இணைக்க ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் காய்களை நகர்த்தி வந்த சூழலில் அவரும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் பலரும் அதிமுகவில் சேரும் எண்ணத்தில் உள்ளனர். அவர்களும் விரைவில் சேர வாய்ப்புள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x