Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
தமிழகத்தில் உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, நரிக்குறவ மாணவி ஒருவருக்கு கையடக்க கணினி, கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கான சான்றிதழ், முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. வேலுமணி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, அதே கூட்டணியில் உள்ள ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 'தவறு செய்தவர்கள் அனைவரும் விசாரணைவளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள்' என்று தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறிழைத்தவர்களில் முக்கியமானவர் ராஜேந்திர பாலாஜி. அவர் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும்.
நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின்படி, தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடன் இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT