Published : 13 Aug 2021 03:18 AM
Last Updated : 13 Aug 2021 03:18 AM

ஆம்பூரில் கோயிலுக்கு அருகே மருத்துவமனை செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது: இந்து மக்கள் கட்சி தலைவர் கோரிக்கை

திருப்பத்தூர்

ஆம்பூர் நாகநாதசுவாமி கோயி லுக்கு அருகே மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘ஆம்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகநாதசுவாமி கோயில் உள்ளது. கோயில் மாட வீதியில் இருந்த திருமண மண்டபத்தை கரோனா சிகிச்சை அளிப்பதற்காக புதிய மருத்துவமனையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். மாட வீதியில் மருத்துவமனை அமைய வழியில்லை.

எந்த நேரமும் வாகனங்கள் வந்து செல்வதால் கோயிலின் அமைதி கெடும், பக்தர்களுக்கும் அசவுகரியமாக அமையும். கோயில் திருவிழாக்களின் போது பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால், அந்த இடத்தில் மருத்துவ மனை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகிறோம். இதற்காக, ஏற்படுத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் நாங்கள் இதையே வலியுறுத்தி வருகிறோம். எங்களுடைய கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், அமைதிக் கூட்டத்தில் பங்கேற்ற இந்து சமய பிரமுகர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதையே காரணமாக வைத்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கோயிலுக்கு வழிபாடு செய்ய செல்வதையும், நிர்வாகிகளை சந்திக்க ஆம்பூருக்கு வரக் கூடாது என்று போடப்பட்ட தடை களையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்டஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். எங்களுடைய கோரிக்கை களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்'’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x