Published : 12 Aug 2021 07:57 PM
Last Updated : 12 Aug 2021 07:57 PM

அன்னைத் தமிழில் அர்ச்சனை; பாடல் நூல்களை வெளியிட்ட முதல்வர் 

அன்னைத் தமிழில் அர்ச்சனைக்கான போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''முதல்வர் மு.க.ஸ்டாலின், மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் "அன்னைத் தமிழில் அர்ச்சனை" செய்யவிருக்கும் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை 3.8.2021 அன்று வெளியிட்டார். முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” எனும் கொள்கையில் திளைத்த தமிழ் அறிந்த பெருமக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (12.8.2021) வெளியிட்டார். இறைவனின் பெருமைகளையும் பதிகம் மற்றும் பாடல்களால் உயர்வாக 'ஒப்புமை செய்து' போற்றுவதற்குp போற்றி நூல்கள் வழிவகுக்கும்.

இந்த முயற்சியின் மூலம், கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ் மொழி மூலம் அர்ச்சனை என்பதால் அகமகிழ்வார்கள்.

அறிந்த மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர் சொல்வதைப் பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் இந்தப் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும்.

இந்த நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உடனிருந்தனர்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x