Published : 12 Aug 2021 05:59 PM
Last Updated : 12 Aug 2021 05:59 PM

சென்னை மாநகரை அழகுப்படுத்த என்ன செய்யலாம்?- அதிகாரிகள் ஆலோசனை

மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை

சென்னை மாநகரை அழகுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 12) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் சென்னையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், மாநகரை தூய்மையுடன் பராமரித்து அழகுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் தலைமையில் இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகர எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 426 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்துக்கு உயர்த்திடும் வகையிலும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் பாலங்கள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி பாலங்கள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றை அழகுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான விமான நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலையத் தூண்கள், திருமங்கலம் மேம்பாலம் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்விடங்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகுப்படுத்துதல், முக்கியச் சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் பல்வேறு கலந்தாலோசகர்களின் மூலம் வடிவமைக்கப்பட்ட மாதிரி திட்டங்களின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வருங்காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, மூன்று துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாதந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதீப் யாதவ், ககன்தீப்சிங் பேடி பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக முன்பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்துதல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x