Published : 12 Aug 2021 05:09 PM
Last Updated : 12 Aug 2021 05:09 PM
ஓசூரில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு பட்ஜெட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு ப குதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற நம்பிக்கையில், ஓசூர் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளனர்.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் ஓசூர் தலைவர் வேல்முருகன், மாநில துணை செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக, மத்திய அரசிடம் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழக அரசு நிகழாண்டில் 3 மாத ஊராடங்குக்கான வங்கி வட்டியை தள்ளுபடி செய்தால், தமிழகத்தில் உள்ள 2.75 லட்சம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில், 2 கோடி பேர் பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். கேரளாவில் சிறு, குறு தொழிற்சாலைகளின் வாழ்வாதாரம் காக்க ரூ.3,650 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதேபோல், தமிழக அரசும் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
மேலும், சொத்து வரி, சிப்காட், சிட்கோ பராமரிப்பு உள்ளிட்ட வரிகள் ஒரு ஆண்டுக்கு தள்ளுபடி செய்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்தும் மத்திய அரசை எதிர்நோக்கி உள்ளது. குறிப்பாக, வங்கி கடன்கள் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மட்டுமே வழங்கி வருகிறது. அவ்வாறு கொடுக்கப்படும் கடன்களை மெல்ல, மெல்ல வங்கிகள் குறைத்து வருகிறது.
தமிழகத்தில் சிறு, குறு தொழில்களை காக்க, தமிழ்நாடு சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கான வங்கி ஒன்றை உருவாக்கி, வங்கிக் கடன்கள் வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறு, குறு தொழிற்சாலைகள் மூலம் ரூ. 3 லட்சம் கோடி வர்த்தகமாக உள்ளது. இது எதிர்காலத்தில் ரூ.10 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு உள்ளது. இதேபோல், ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து இங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும், இங்குள்ள இயற்கை சீதோஷ்ண நிலைகள் பாதிக்காத வகையிலும், தொழில்பூங்காக்கள், சாலைகள்,பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி, தொலைநோக்கு திட்டத்தோடு ஒரு செயலாக்கத்தை முன் வடிவம் செய்தால், மேலும் இங்கு பல பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழகத்துக்கு பல வகையில் வருமானம் பெருகும். எனவே. நாளை (ஆக. 13) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் இதை எதிர்நோக்கி உள்ளோம்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT