Published : 12 Aug 2021 02:53 PM
Last Updated : 12 Aug 2021 02:53 PM

மாஃபா பாண்டியராஜனுக்குப் பொருளாதாரம் தெரியாது; வாய்க்கு வந்தபடி உளறுகிறார்; நிதியமைச்சர் காட்டம்

சென்னை

மாஃபா பாண்டியராஜனுக்குப் பொருளாதாரம் தெரியாது. அவர் வாய்க்கு வந்தபடி உளறுபவர் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தமிழகத்தில் அதிக சொத்துகள், வளங்கள் உள்ளதால்தான் தமிழகத்தில் கடன் வாங்கும் தகுதியும் அதிகமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அவர் குறித்து நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவருக்குப் பொருளாதாரம் தெரியாது. அவர் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறும் நபர். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தனது கன்னிப் பேச்சின்போது, 7-வது ஊதியக் குழுவின் ஊதியத்தை உயர்த்தியதுதான் பற்றாக்குறைக்குக் காரணம் என்று சொன்னவர் மாஃபா பாண்டியராஜன்.

பொருளாதாரத்தில் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்பது உண்மை. நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே நீதிக் கட்சி வந்ததாலும், எல்லோருக்கும் கல்வியைக் கொண்டுவந்து, சமூக நீதி அடிப்படையில் அனைவருக்குமான ஏற்றத் தாழ்வைக் குறைத்ததாலும் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக உள்ளது. அந்த வளர்ச்சிக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் எங்கோ பெட்டிக் கடையில் உள்ள பாட்டிலுக்கும் உள்ள சம்பந்தம்தான் அவருக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ளது. அதாவது சம்பந்தமே கிடையாது. அவருடைய கேள்விக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது''.

இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x