Published : 12 Aug 2021 11:46 AM
Last Updated : 12 Aug 2021 11:46 AM
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக அதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், செப். 15-க்குள் இம்மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தேர்தலுக்கு திமுக, அதிமுக ஆகிய முதன்மைக் கட்சிகள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று (ஆக.11) வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாகச் செயல்படுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (ஆக. 12) இரண்டாவது நாளாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டச் செயலாளர்கள், கீழ்மட்ட நிர்வாகிகளுடன் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த இரு நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT