Published : 12 Aug 2021 11:22 AM
Last Updated : 12 Aug 2021 11:22 AM
வனத்துக்குள் விட்டும் ஊருக்குள் திரும்பி வந்த ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து, நாளை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தும்பிக்கை சுருங்கி சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் வனத்தில் விட்டனர். ஆனால், அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்குத் திரும்பி வந்துவிட்டது.
அந்த யானையை மீண்டும் வனத்தில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்குக் கொண்டுசெல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஆதரவற்றுச் சுற்றிவந்த ரிவால்டோ யானை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களுடன் நெருங்கிப் பழகிவிட்டதால், காட்டில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் விட்டும் கூட, அடுத்த நாளே திரும்பி வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யானையை மீண்டும் வனத்தில் விடும்போது அதன் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அதை மீண்டும் வனத்துக்கு அனுப்ப வேண்டாம் என, வனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 12) விசாரணைக்கு வந்தபோது, ரிவால்டோ யானையை மீண்டும் வனத்துக்கு அனுப்பினாலும் அது திரும்பி வந்துவிடும் எனவும், அப்போது மின்சார வேலியில் சிக்கி பலியாக வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிலையில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அதை எம்.ஆர்.பாளையம் முகாமுக்குக் கொண்டுவர இயலாது என்றார்.
இதையடுத்து, ரிவால்டோ யானையின் மறுவாழ்வுக்கு என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து, நாளை (ஆக. 13) விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT