Published : 12 Aug 2021 03:19 AM
Last Updated : 12 Aug 2021 03:19 AM
‘இந்திய விண்வெளியின் தந்தை’என்று அறியப்படுகிற விக்ரம்சாராபாய், இஸ்ரோ தொடங்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டவர். அவர், திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மருமகன். இப்படி பல தொழில்முறை மற்றும் குடும்பத் தொடர்புகளை தமிழகத்துடன் கொண்டவர் விக்ரம் சாராபாய்.
கைக்கெட்டாத மரக்காணம்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முகமாக இன்று அறியப்படுகிறது ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவன் விண்வெளி மையம். அது தமிழகத்தில் அமைந்திருக்கக்கூடிய சூழல் தொடக்க காலத்தில்இருந்ததாக மூத்த விண்வெளி விஞ்ஞானிஆர்.எம்.வாசகம் என்னுடன் பகிர்ந்து கொண்டார். செயற்கைக்கோள் ஏவுதளத்தை அமைக்க ஏதுவான பகுதியான இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், தோதான இடத்தை தெரிவு செய்யும் முயற்சியில் இருந்தார் விக்ரம் சாராபாய்.
தமிழகத்தின் மரக்காணம் ஏரியை ஒட்டிய உப்பு நிலப்பகுதிதான் விஞ்ஞானிகளின் முதல் தேர்வாக இருந்தது. ஆய்வுக்கூடங்கள், விஞ்ஞானிகளின் குடியிருப்புகள் ஆகியவற்றை அமைக்க அருகில் சகல வசதிகளோடு பாண்டிச்சேரி இருந்ததும் ஒரு முக்கிய காரணம். போதுமான பரப்பளவில் இடம் அமையாதது உள்ளிட்ட காரணங்களால் அத்தகைய வாய்ப்பு அப்போது தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.
தமிழகத்தில் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக விக்ரம் சாராபாய், தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேச ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர், பேரறிஞர் அண்ணா உடல்நிலை சரியில்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதையும் தமிழக அமைச்சர் மதியழகன் கூட்டத்தில் பங்கேற்றார் என்பதையும் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார் மூத்த விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன்.
சாராபாய் தோற்றுவித்த இஸ்ரோ நிறுவனத்தின் ஒரு அங்கமான இஸ்ரோஉந்துசக்தி வளாகம், திருநெல்வேலி மாவட்டத்தின் மகேந்திரகிரியில் இயங்கிவருகிறது. விண்வெளி ஆய்வைத் தாண்டிசாரா பாய் பல ஆராய்ச்சி முயற்சிகளைத் தமிழகத்தில் முன்னெடுத்துள்ளார்.
கல்பாக்கம் - அணு ஆராய்ச்சி
அணு விஞ்ஞானி ஹோமிபாபாவின் அகால மறைவுக்குப் பிறகு விக்ரம் சாராபாய், இந்திய அணுசக்தி ஆணையத்தின்தலைவரானார். அவருடைய தலைமையில் தமிழகத்தில் அணு ஆராய்ச்சி துளிர்விட்டது. வேக ஈனுலை (Fast BreederReactor) தொடர்பான ஆராய்ச்சிகள் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிமையத்தில் சிறிய அளவில் தொடங்கின. அந்தச் சூழலில், வேக ஈனுலை ஆய்வை முதன்மைப்படுத்தி 1971-ல் ‘அணுஉலைஆராய்ச்சி மையம்’ கல்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. இதை தொடங்கி வைத்தவர் சாராபாய். இந்த நிறுவனம்தான்தற்போது இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையமாக வேர்விட்டு வளர்ந்திருக்கிறது.
அணு உலையில் பயன்படுத்தப்படும் ட்யூடெரியம் (Deuterium) செறிந்த நீர், கனநீர் (Heavy water) எனப்படும். இந்த நீரைஉருவாக்கும் கனநீர் தொழிற்சாலை தூத்துக்குடியில் சாராபாயின் பதவிக்காலத்தில்தான் தொடங்கப்பட்டது.
கொடைக்கானல் - காஸ்மிக் கதிர்கள்
சூரிய குடும்பத்துக்கு வெளியில் உருவாகி பூமியை நோக்கி மழையாகப் பெய்யும் அணுத்துகள்கள், காஸ்மிக் கதிர்கள்(அண்டக்கதிர்கள்) என்றழைக்கப்படுகின்றன. இந்த காஸ்மிக் கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் முனைவர் பட்டம் பெற்றவர் விக்ரம் சாராபாய். இந்தியா திரும்பிய சாராபாய், அகமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத்தை ஏற்படுத்தி காஸ்மிக் கதிர்கள்குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
காஷ்மீரின் குல்மார்கில் ஒரு வானியல்பதிவுக்கூடத்தை ஏற்படுத்தி ஆராய்ச்சியை விரிவுபடுத்தினார். இதைத்தொடர்ந்து கொடைக்கானலில் ஒரு பதிவுக்கூடத்தை ஏற்படுத்தினார் சாராபாய். 1951-ல் அமைக்கப்பட்ட இந்த பதிவுக்கூடம் மூலம், காஸ்மிக் கதிர்களின் செறிவு, வளிமண்ட ஓசோன், இரவில் வான ஒளிர்வு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1960-களின் பிற்பகுதியில் உருப்பெற்ற இஸ்ரோ நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன்னரே, சாராபாய் தமிழகத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போரின் விளைவாகசாராபாய் தனது முனைவர் பட்ட ஆய்வின்ஆரம்பக்கட்டத்தை பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் மேற்கொண்டார். அவருடைய ஆய்வு வழிகாட்டி நோபல் பரிசு பெற்ற தமிழக விஞ்ஞானி சி.வி.ராமன். 1971, டிசம்பர் 30-ம் தேதி, சாராபாய் தனது மரணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு பேசியது அப்துல்கலாமுடன். இதை தனது ‘அக்னி சிறகுகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார் கலாம்.
குடும்பமும் தமிழகமும்
சாராபாயின் மனைவி மிரிணாளினி கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.அவர் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்.சாராபாய் தனது துணைவியாருடன், தர்ப்பனா நிகழ்த்துக் கலைகள் பயிற்சி மையத்தை குஜராத்தில் நிறுவி கலைப்பணியையும் செய்தார். மிரிணாளினியின் தந்தை சுப்பராம சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். தாய் அம்மு சுவாமிநாதன், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் உறுப்பினராகவும், சுதந்திரத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் திண்டுக்கல்தொகுதி எம்பியாகவும் இருந்தவர்.
மிரிணாளினியின் மூத்த சகோதரிதான் பிரபல விடுதலைப் போராட்ட வீராங்கனைகேப்டன் லட்சுமி. இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். கேப்டன் லட்சுமி, பின்னாளில் சாராபாயின் சீடரான அப்துல்கலாமை எதிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது இன்னொரு சுவாரசிய செய்தி.
கனவுகளின் கட்டிடக்காரர்
விக்ரம் சாராபாய், பல நிறுவனங்களைதோற்றுவித்தவர். அவை அணுசக்தி, வானியல், விண்வெளி, மின்னணுவியல், வணிக மேலாண்மை, நிகழ்த்துக் கலை என பலதுறைகளைச் சார்ந்தவை. ஒருமனிதர் இத்தனை ஆர்வங்களை கொண்டிருந்ததும், ஆர்வங்களில் முகிழ்த்த கனவுகளை நிறுவனங்களாக நிர்மாணித்ததும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் தரக்கூடியது. அவருடைய தமிழகத் தொடர்புகள் நமக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கட்டும்!
இன்று (ஆக.12) விக்ரம் சாராபாய் பிறந்த தினம்
கட்டுரையாளர்: பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி, ‘விண்ணும் மண்ணும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT