Published : 12 Aug 2021 03:19 AM
Last Updated : 12 Aug 2021 03:19 AM
சட்டப்பேரவை நடைமுறை விதிகளுக்கு முரணாக அமைச்சர்கள் செய்தி வெளியிடுவதை தவிர்க்க அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆக.13-ல் நிதிநிலை அறிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை விதியின் கீழ் ஆளுநரால் குறிப்பிடப்படும் நாளில் நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதன்படி, ஆளுநரால் 2021-22-ம்ஆண்டுக்கான திருத்திய நிதிநிலைஅறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான நாள் ஆக.13-ம் தேதிஎன குறிப்பிடப்பட்டு அதற்கான தகவலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம், மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பு ஆகியவற்றுக்கான நாட்கள் குறிப்பிடப்பட வேண்டும். இதற்கு சட்டப்பேரவை விதிகளில் வழிவகை உள்ளது.
சட்டப்பேரவை விதிகளில், வரவுசெலவுத் திட்டம் பொது விவாதம் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதுவாக்கெடுப்பு என 2 கட்டங்களாக பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், அலுவல்ஆய்வுக் குழுவை கலந்தாலோசித்து நிதிநிலை அறிக்கை மீதானபொது விவாதத்துக்கு 10 நாட்களுக்கு மேற்படாமலும், மானியகோரிக்கைகள் மீதான வாக்கெடுப்புக்கு 30 நாட்களுக்கு மேற்படாமல், பேரவைத் தலைவர் போதிய நாட்களை ஒதுக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளுக்கு ஏற்ப, தமிழக சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்ய ஏதுவாக, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் ஆக.10-ம் தேதி தலைமைச் செயலகத்தில் பேரவைத்தலைவர் அறையில் நடைபெறும் என்ற தகவல் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க, சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்டது.
முன்கூட்டியே செய்தி வெளியீடு
ஆனால், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே, அதாவது ஆக.8-ம் தேதி அன்றே வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆக.14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று வேளாண் அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி முடிவெடுப்பதற்கு முன்பே, அமைச்சர் அதுகுறித்து வெளியில் செய்தி வெளியிடுவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்றாகும்.
எனவே, இனிவரும் காலங்களில் தமிழக சட்டப்பேரவை விதிகளுக்கு முரணாக, நடைமுறைக்கு புறம்பாக அமைச்சர்கள் இதுபோன்று பேட்டியளிப்பதை தவிர்க்க தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT