Published : 08 Feb 2016 09:07 AM
Last Updated : 08 Feb 2016 09:07 AM
சென்னை துறைமுகத்தின் பயன் பாட்டுக்காக சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 100 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்னுற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. சென்னை கடற்கரைப் பகுதியில் 1639-ம் ஆண்டே கப்பல் போக்குவரத்து மூலம் வணிகம் தொடங்கியது. இதற்காக, 1861-ம் ஆண்டு சிறிய அளவிலான துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால், 1868 மற்றும் 1872-ம் ஆண்டுகளில் வீசிய கடும் புயல் காரணமாக இத்துறைமுகம் சேதம் அடைந்தது.
இதையடுத்து, 1881-ம் ஆண்டு செயற்கைத் துறைமுகம் அமைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று இத்துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த இத்துறைமுகத்தை பசுமை துறை முகமாக மாற்ற துறைமுக நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துறைமுக அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களிலும் அவற்றுக்குத் தேவையான மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி சென்னை துறைமுகத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் செலவில் 100 கிலோவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்னுற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், கிழக்குக் கடற்கரை பிராந்தியத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல் துறைமுகம் என்ற பெருமையை சென்னை துறைமுகம் பெற்றுள்ளது.
இரண்டாம் கட்டமாக ரூ.4 கோடி செலவில் 400 கிலோவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஆலை பயன்பாட்டுக்கு வரும். மேலும், காற்றாலை மூலமும் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட் டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ.100 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், சென்னை துறைமுகம் மாசற்ற பசுமைத் துறைமுகமாக மாறும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT