Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
முதல்கட்டமாக, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று காலையில் ஆலோசனை நடத்தினர். இதேபோல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் மாலையில் ஆலோசனை நடத்தினர்.
இதில், துணை ஒருங்கிணைப் பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கிய அறிவுரைகள் குறித்து, மாவட்டச் செயலர் ஒருவர் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது:
ஆட்சியிலிருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற்றோம். ஆனால், தற்போது எதிர்க் கட்சியாக இருந்து தேர்தலை சந்திக்க உள்ளோம்.
நெருக்கடி தரும் திமுக அரசு
அதேபோல, பழிவாங்கும் நோக்கில்முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனை நடத்தி, நமக்கு நெருக்கடி தரும் வேலையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது.
தற்போது தேர்தல் நடக்கும்பகுதிகளில் அதிமுக எம்எல்ஏகள் உள்ளனர். அதேபோல, மிகவும்குறைவான வாக்குவித்தியாசத்தில்தான் சில தொகுதிகளை நாம் இழந்துள்ளோம். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் இருந்தால், அனைத்து இடங்களையும் கைப்பற்றி விடலாம்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் அனைத்துப் பகுதிகளுக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட அனைத்து நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், இதர மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பிரச்சாரம் செய்ய வருகிறோம்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 தருவதாகக் கூறினர். ஆனால், அதை இன்னும் நிறைவேற்றவில்லை. இதுபோல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை முன்னிறுத்தி, தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டணிக் கட்சி மீதும், நமது கட்சிக்குளும் இருக்கும் மனக்கசப்புகளை மறந்து, தேர்தல் பணியாற்றி, முழு வெற்றியைப் பெற்றுத் தாருங்கள் என்று அறிவுரை வழங்கினர். இவ்வாறு அதிமுக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
மீதமுள்ள தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று (ஆக. 12) ஆலோசனை நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT