Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக பாசன நீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் மதகை இயக்கி நீரை திறந்து வைத்தனர். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் க.வீ.முரளிதரன், எஸ்.அனீஷ்சேகர், எஸ்.விசாகன், ப.மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கேஎஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூக்கையா, தங்கதமிழ்ச்செல்வன், கண்காணிப்புப் பொறியாளர்கள் எம்.சுகுமார், வி.சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதகுப் பகுதியில் பல தேன்கூடுகள் இருந்தன. வந்திருந்தவர்களிடம் இருந்து வாசனைத் திரவியங்களின் நெடி பரவியதால் கூட்டில் இருந்த தேனீக்கள் வெளியேறி அங்குள்ளவர்களை ஆக்ரோஷமாக கொட்டத் தொடங்கின. இதனால் பலரும் ஓட்டம் எடுத்தனர். இதில் தேனி, திண்டுக்கல் ஆட்சியர்கள் முரளிதரன், விசாகன், தேனி காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே, அணை உதவிப்பொறியாளர் குபேந்திரன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தேனீக்கள் விரட்டியதால் 2 மதகுகளை மட்டும் திறந்துவிட்டு அனைவரும் உடனடியாக வெளியேறினர். பின்பு நிலைமை சரியானதும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் இதர மதகுகளிலும் நீரை திறந்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT