Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது: காஞ்சி, செங்கை மாவட்ட எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டங்களின் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தா.மோ.அன்பரசன் தலைமையில் மறைமலை நகரில் நேற்று நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் எம்எல்ஏக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். படம்: எம்.முத்துகணேஷ்

மறைமலை நகர்

வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா பெறுவதற்கு பொதுமக்கள் போராட வேண்டி உள்ளது. அதிகாரிகள் இன்னும் திருந்தாமல் பணம் பெறுவதிலேயே குறியாக இருப்பதாக காஞ்சி, செங்கை எம்எல்ஏக்கள் புகார் தெரிவித்தனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று மறைமலை நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன். பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் டாக்டர் வினய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர். ராஜா,பல்லாவரம் இ.கருணாநிதி, சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், திருப்போரூர் பாலாஜி, செய்யூர் பனையூர் பாபு, காஞ்சிபுரம் எழிலரசன், உத்திரமேரூர் சுந்தர் ஸ்ரீபெரும்புதூர் கு.செல்வப்பெருந்தகை, செங்கல்பட்டு வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் வருவாய்த் துறை தொடர்பான புகார்களைத் தெரிவித்தனர். அரசின் திட்டங்களுக்கு நில எடுப்பு பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன. முதியோர், விதவை உள்ளிட்ட எந்த விண்ணப்பங்கள் மீதும் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்யாமல் மனுக்களை தள்ளுபடி செய்கின்றனர். உட்பிரிவு பட்டாக்கள் பெற மக்கள் அதிகாரிகளுடன் போராட வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகிறார்கள். பணம் கொடுத்தால் மட்டுமே வட்டாட்சியர் அலுவலகங்களில் அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன.

ஏழை - எளியவர்கள் வசிக்கும் பகுதி,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.வசதி படைத்தவர்கள் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றுவதில்லை. மக்களுக்கு அரசு வழங்கிய பட்டாக்கள் கடந்த 20 ஆண்டுகளாக வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பட்டா வழங்கும் பணி சரிவர நடைபெறவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்வைத்தனர். கூட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்கள் பாதியிலேயே வெளியேற்றப்பட்டனர். ஆனால், கூட்டத்துக்கு சம்பந்தமில்லாத திமுகவை சேர்ந்த ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆய்வு கூட்டத்துக்குப் பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்பட்ட பட்டாக்களை முறையாக ஆய்வு செய்து ஆவணங்களில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பின், செங்கல்பட்டு மாவட்டத்துக்குத் தேவையான ஆவணங்கள் இன்னும் காஞ்சிபுரம்மாவட்டத்தில் இருந்து வழங்கப்படவில்லை. அவற்றை விரைந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அவற்றை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x