Published : 12 Aug 2021 03:21 AM
Last Updated : 12 Aug 2021 03:21 AM

விருத்தாசலத்தில் நிச்சயம் செய்தவரை திருமணம் செய்து வைக்கக்கோரி மகளிர் காவல் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கடலூர்

விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிச்சயம் செய்தவரை திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் மகள் பூர்ணிமா(19). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இருவரும் ஒரே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து தொடர்ந்து காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்தோடு இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது பெண் வீட்டார் மணமகனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் மணமகனின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து பெண் வீட்டார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு மாதம் முன்பு புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய போலீஸார் திருநாவுக்கரசை விசாரணைக்காக அழைத்தபோது அவர் தலைமறைவாகி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமா அவரது தாயார் சகுந்தலாவுடன் நேற்று மகளிர் காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்பு அவர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணையை தன்மேல் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார். போலீஸார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் தாயும், மகளும் வீட்டுக்குச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x