Published : 12 Aug 2021 03:22 AM
Last Updated : 12 Aug 2021 03:22 AM
திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள், தொல்லி யல் சின்னங்கள் குறித்து சமூக வலைதளங்களின் வழியாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ‘ஆற்றுப்படை’ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொல்லியல் சிறப்பும், பாரம் பரிய பண்பாடும், வரலாற்றுப் பெருமையும் கொண்ட தமிழ் மண்ணில் எங்கெங்கு காணினும் முன்னோர்கள் விட்டுச் சென்ற அடையாளச் சின்னங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. மன்னராட்சி கால கோயில்கள், அரண்மனைகள், குகைக் கோயில்கள், குகை ஓவியங்கள், சமண கோயில்கள், பாரம்பரிய கட்டிடங்கள், கல்வெட் டுகள், நாணயங்கள், செப்புத் தகடுகள் என பண்டைகால வரலாற்று பின்னணி கொண்ட ஏராளமான வரலாற்றுச் சான்று கள் நம்மைச் சுற்றிலும் காணப் படுகின்றன.
சேதப்படுத்தப்படும் சின்னங்கள்
ஆனால், இவை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லா ததால், அச்சின்னங்கள் பராமரிப் பின்றி கிடப்பதுடன், சேதப்படுத் தப்பட்டும் வருகின்றன. இந்நிலை யில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வரலாற்று நிகழ்வுகள், தொல்லியல் சின்னங் கள் குறித்து சமூக வலைதளங் கள் வழியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் வே.பார்த்திபன், பா.பிரபாகரன், அ.டேவிட்ராஜ், அ.நடராஜன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வரு கின்றனர். பொன்மலைப்பட்டியி லுள்ள புனித ஆக்னஸ் நடுநிலைப் பள்ளியில் 1999-ம் ஆண்டு 8-ம் வகுப்பில் படித்த இவர்கள், தொல்லியல் மீதான ஆர்வத்தில் தற்போது மீண்டும் ஒன்றிணைந்து ‘ஆற்றுப்படை’ என்ற பெயரில் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பழங்கால வரலாறு, தொல்லியல் சின்னங்கள் குறித்து எளிதில் புரியும் வகையில் விளக்கி வரு கின்றனர்.
‘மீம்ஸ்' வழிமுறையில் பதிவுகள்
இதுகுறித்து ‘ஆற்றுப்படை' குழுவைச் சேர்ந்த வே.பார்த்திபன் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறிய தாவது: இப்பகுதியிலுள்ள ஒவ் வொரு ஊரிலும் ஏதேனும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னம் இருக்கிறது. ஆனால் அதுகுறித்து அங்குள் ளவர்களுக்குகூட தெரிவதில்லை. எனவே நாங்கள் தெரிந்து கொண்டதை, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ‘ஆற்றுப்படை’ என்ற பெயரில் வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் விரிவாக பதிவிட்டோம். ஆனால், அதற்கென நேரம் ஒதுக்கி படிப்பதற்கு மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. எனவே, தற்போது மக்களை மிகவும் கவரும் ‘மீம்ஸ்’ வழியாக இத்தகவல்களை கொண்டு சென் றோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
அதன்படி, கிராமங்களில் கிடைக் கும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை புகைப்படம் எடுத்து, அதுதொடர்பாக 2 வரிகளில் விளக் கமளித்து பதிவிட்டு வருகிறோம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கோயில்கள் எப்படி இருந்தன, இப்போது எப்படி உள்ளன என இரு கால புகைப்படங்களையும் இணைத்து ஒப்பிட்டு பதிவிடு கிறோம். தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்புகள் எவை, தற்போது அவை எந்தெந்த நாடு களாக உள்ளன எனக் குறிப்பி டுகிறோம். விரிவான தகவல் கள் தேவைப்படுவோர் அந்த பதிவிலுள்ள க்யூஆர் கோடு வழியாகச் சென்று படித்துக் கொள்ள வழி செய்துள்ளோம். இதற்கு இங்கு மட்டுமில்லாமல், வெளிநாட்டு தமிழர்களிடமிருந்தும் வரவேற்பு கிடைக்கிறது.
உள்ளூர் சுற்றுலாவுக்கு வாய்ப்பு
ஒரு கிராமத்திலுள்ள கோயில், சின்னம் குறித்து பதிவிடும்போது அந்த ஊரைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் வாட்ஸ் அப் குழுக்களிலும் அத்தகவல் பதி விடப்படுகிறது. இதன்மூலம் அந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து அந்த ஊர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதால், அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் தானாகவே அவர்களிடம் வந்துவிடுகிறது. அதேபோல பக்கத்து ஊரில் இப்படி ஒரு அடையாளச் சின்னம் உள்ளது என தெரியவரும்போது, குறைந்தபட்சம் அதனருகிலுள்ள சுற்றுவட்டார மக்கள் அங்குவந்து பார்வையிடுகின்றனர். இதன்மூலம் 'உள்ளூர் சுற்றுலா' உருவாகவும் வழிவகை ஏற்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT