Last Updated : 03 Feb, 2016 09:02 AM

 

Published : 03 Feb 2016 09:02 AM
Last Updated : 03 Feb 2016 09:02 AM

தீர்த்தவாரிக்கு தயார் நிலையில் மகாமக குளம்: தண்ணீர் நிரப்பும் பணி பிப்.5-ல் தொடங்குகிறது

கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழா, மாசி முதல் நாளான பிப். 13-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாசிமகமான பிப். 22-ல் தீர்த்தவாரி நடைபெறு கிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், 40 லட்சம் பேருக்கு மேல் நீராடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்காக, மகாமகக் குளத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து புதிய தண்ணீர் நிரப்புவதற்காக குளம் தயார் நிலையில் உள்ளது.

முன்னதாக, 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட மகாமகக் குளத்தின் படித் துறையைச் சுற்றிலும் புதிய கருங்கல் தளம் அமைக்கப்பட்டு, 18 அடுக்கு கருங்கல் படிக்கட்டுகளில் படிந்திருந்த பாசிகள் மற்றும் அழுக்குகள் அகற்றப்பட்டன.

19 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட குளத்தின் தரைப் பகுதியில், சுமார் 2 அடி அளவுக்கு படிந்திருந்த பழைய மண், மணல், சகதி அகற்றப்பட்டு, அதே அளவுக்கு புதிய மணல் நிரப்பப்பட்டுள்ளது.

மகாமகக் குளத்தில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2 அடி உயரத்துக்கு (12 மில்லியன் லிட்டர்) மட்டுமே தண்ணீர் நிரப்படும். அரசலாற்றின் தலைப்பிலேயே குளோரின் கலக் கப்பட்டு விநாடிக்கு 75 லிட்டர் வீதம் தண்ணீர் குளத்தின் உள்ளே வரும்.

மகாமக தீர்த்தவாரி பிப்ரவரி 22 அன்று நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. அந்த நேரத்தில் 20 ஆயிரம் பேர் குளத் தில் இருப்பார்கள். பக்தர்கள் மீது புனிதநீரை தெளிப்பதற்காக 5 வரிசை சுழலும் தெளிப்பான் கள் (ஸ்பிரிங்ளர்) அமைக்கப்பட்டுள் ளன.

மகாமகக் குளத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி உள்ளிட்ட 20 புனித நதிகள் என அழைக்கப்படும் தீர்த்தக் கிணறு கள் உள்ளன. பாதுகாப்பு கருதி, இந்தக் கிணறுகளைச் சுற்றிலும் போலீஸார் நிறுத்தப்பட்டு, பக்தர் கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தும் முடிந்து தயார் நிலையில் உள்ள மகாமகக் குளத்தில், பிப்ரவரி 5-ம் தேதி முதல் அரசலாற்றில் இருந்து வரும் தண்ணீரை நிரப்பும் பணி தொடங்க வுள்ளது என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காவிரியில் தற்காலிக தடுப்பணை

மகாமகக் குளத்துக்குத் தண்ணீர் வருவதற்காக அரசலாற்றில் சாக்கோட்டை கதவணை மூடப்பட்டு, 8 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கப்படும். இதேபோல, காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறை, பகவத் படித்துறையில் புனித நீராட வசதியாக, அரசு ஆண்கள் கல்லூரி அருகில் மணல் மூட்டைகளைக் கொண்டு தற்காலிகத் தடுப்பணை அமைத்து, அதில் தண்ணீரைத் தேக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆர்கானிக் எல்இடி விளக்குகள்

மகாமகக் குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபம் சீரமைக்கப்பட்டு, அதற்கு ஒளியூட்டுவதற்காக தானியங்கி முறையிலான இயற்கை ஒளி உமிழ் விளக்குகளும் (ஆர்கானிக் எல்இடி), அதற்கு மின்சாரம் வழங்க சோலார் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. குளத்தின் உள்ளே மின்சார ஒயர்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x