Published : 11 Aug 2021 06:36 PM
Last Updated : 11 Aug 2021 06:36 PM
புதுச்சேரிக்குத் தனியாகப் பணியாளர் தேர்வாணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது என்று வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள், மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பணியிடங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள முக்கியமான பதவிகளுக்குரியவர்களைத் தேர்வு செய்து பணியமர்த்துகின்ற வேலையை மத்திய அரசின் கீழுள்ள மத்தியப் பணியாளர்கள் தேர்வாணையக் குழுதான் செய்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு புதுச்சேரி மக்களால் பேசப்படும் தமிழ் மொழி தெரிவதில்லை. இதனால் புதுச்சேரி மக்களால் தங்களுடைய குறையை அவர்களிடம் சரியாக எடுத்துக்கூற முடிவதில்லை. மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் சில ஆண்டுகள் மட்டுமே புதுச்சேரியில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தங்கள் மாநிலத்திற்கே பணிமாற்றல் கேட்டுப் பெற்றுச் சென்றுவிடுகின்றனர். எனவே அந்தப் பணியிடங்கள் அதிக நாட்கள் காலியாகவும் உள்ளன.
இதனால் புதுச்சேரி மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதைச் சரி செய்யும் நோக்கில் புதுச்சேரிக்கு என்று தனியாகப் பணியாளர் தேர்வாணையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதை காங்கிரஸ் கட்சியானது பல முறை எடுத்தும் கூறியிருக்கிறது.
இன்றைய தினம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாஜக தனது தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு எனத் தனியாகப் பணியாளர் தேர்வாணையம் அமைப்பதாக அறிவித்திருந்தது. இந்தத் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது பாஜக தலைவர் சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அந்தத் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக ஒரு உறுதிமொழியைத் தந்துள்ளனர். அதனடிப்படையில் நான் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பினேன்.
அதாவது புதுச்சேரி பணியாளர்கள் தேர்வாணையம் தேவை என்று எடுத்துக் கூறியிருந்தேன். அதற்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தர முடியாது என முழுமையாக மறுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி இளைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் மத்தியில் இருக்கும் பாஜக தலைவர்கள் ஒன்றாக இணைந்து பொய்யான வாக்குறுதியைத் தந்துள்ளனர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியைச் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தியதற்கும் வாய்ப்பு இல்லை என்று பதில் அளித்துவிட்டது. ஆனால், புதுச்சேரி தேர்தல் அறிக்கையில் மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியைச் சேர்ப்பதாக உறுதி அளித்திருந்தது.
எனவே, புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்., பாஜக ஒன்றாக இணைந்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அழுத்தம் தந்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளபடி தேர்வாணையமும், நிதிக் குழுவில் புதுச்சேரியில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பெற வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் அளித்துள்ள அனைத்தையும் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT