Published : 11 Aug 2021 06:08 PM
Last Updated : 11 Aug 2021 06:08 PM

பெரம்பலூரில் முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்கக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட 2,900 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகக் குன்னம் மற்றும் வேப்பந்தட்டை கிராமங்களில் 2,937 ஏக்கர் நிலம் 2007-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் டிட்கோ நிறுவனம், நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தமிழ் தேசிய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சிவபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ''சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் வேலை என்ற வாக்குறுதியை நம்பி ஏராளமான விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனம் நேரடியாக நிலங்களை வாங்கியபோதும், அதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்காமல் அந்த நிலங்களை அடமானம் வைத்து வங்கிகளில், சுமார் 1,500 கோடி ரூபாய் கடன் பெற்றது.

வங்கிகளில் பெற்ற கடனை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம், குறிப்பிட்ட தனியார் நிறுவனம், நில உரிமையாளர்களை மோசடி செய்தது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முறைகேடாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x