Published : 11 Aug 2021 05:39 PM
Last Updated : 11 Aug 2021 05:39 PM
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அந்தந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப். 15-க்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் தேர்தலை நடத்த மநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைபபாளர் ஈபிஎஸ் தலைமையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
தற்போது 2 ஆம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்திருக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கட்சியை மாவட்டங்களில் வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இதுவரை 5 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றுள்ள நிலையில் எஞ்சியுள்ள 4 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளுடனும் இன்றே பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT