Published : 11 Aug 2021 05:03 PM
Last Updated : 11 Aug 2021 05:03 PM
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ தலைமையில், திமுக எம்எல்ஏ சம்பத் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
''விழுப்புரத்தில் இருந்து கடலூர் மார்க்கமாகச் செல்லும் கனரக வாகனங்கள் புதுச்சேரி நகரப் பகுதிக்கு வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல் இருக்க, அரும்பார்த்தபுரத்தில் இருந்து முதலியார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகில் 100 அடி சாலையை இணைக்கப் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு நில ஆர்ஜிதம் செய்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நில ஆர்ஜிதத்துக்குப் பெருமளவில் தொகை வழங்கப்பட்டும் பாழாகி வருகிறது. அதேசமயம் அந்தப் புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்தால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகள் தவிர்க்கப்படும்.
நில ஆர்ஜிதம் செய்து தற்போது பயன்பாட்டுக்கு இல்லாமல் இருக்கும் இடத்தில் சமூக விரோதச் செயல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் வடிவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் உள்ளதால், அப்பகுதியில் தேங்கி நிற்கும் நீர் நோய்த் தொற்று ஏற்படக் காரணமாக அமைகிறது.
மேலும் அருகில் உள்ள வேல்ராம்பட்டு ஏரி நிரம்பும்போதும், வெளியேறும் நீரும் அங்கு பாய்ந்து தேங்குகிறது. அவ்வாறு தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் ஏரி நீர் வெளியேற பாலங்கள் கட்டப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு நிலத்தின் மட்டத்தைக் கணக்கிட்டு மழைநீர் வெளியேறுவதற்குப் பாலங்கள் துரிதமாக அமைக்கப்பட வேண்டும்.
புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைவதற்கும், புறவழிச்சாலை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், புறவழிச்சாலை அமைக்க ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தும் வகையிலும், புறவழிச்சாலைப் பணிகளை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தொடங்கி முடிக்க வேண்டும்.
மேலும், அப்பாதையில் நீர் தேங்காமல் இருக்கின்ற நிலையைப் போக்கி பாதுகாப்பான போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT