Published : 11 Aug 2021 04:45 PM
Last Updated : 11 Aug 2021 04:45 PM

நெல் கொள்முதல்; உழவர்களை பாதிக்கும் புதிய கட்டுப்பாடுகளை நீக்குக: ராமதாஸ்

சென்னை

நெல் கொள்முதலில் உழவர்களை பாதிக்கும் புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள‌ அறிக்கை:

''காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவைப் பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் போதிய அளவில் திறக்கப்படவில்லை. அதனால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்முதல் செய்வதற்காகத் தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் உழவர்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கின்றன. தமிழக அரசின் கட்டுப்பாடுகள் நியாயப்படுத்த முடியாதவையாகும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டங்களில் மின்சார மோட்டார்களை நம்பிப் பாசனம் செய்யும் உழவர்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குறுவை சாகுபடியைத் தொடங்கிவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவைப் பருவ அறுவடை கடந்த மாதமே தொடங்கிவிட்டது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் சம்பா பருவ நெல்லைக் கொள்முதல் செய்வதற்காகத் திறக்கப்பட்ட கொள்முதல் நிலையங்கள், தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எந்தச் சிக்கலும் இல்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அதற்கு முற்றிலும் எதிராக, உழவர்களின் நிலை மோசமாக உள்ளது.

நாகை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தாலும் கூட, அரசின் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும்தான் திறக்கப் பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு 164 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட ஆட்சியரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை முழுமையாகச் செயல்படவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாகவே, சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வரும் 56 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும்தான் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் பெரும்பாலான இடங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு செயல்பட்ட 250-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த ஆண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்த நெல் மூட்டைகளைத் தங்கள் பகுதியிலுள்ள கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டுசென்று வைத்து உழவர்கள் காத்திருக்கும் நிலையில், மொத்த கொள்முதல் நிலையங்களில் 20%க்கும் குறைவான கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருப்பதால் டெல்டா உழவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாகத் திறக்கப்படாவிட்டால், அறுவடை செய்யப்படும் நெல்லில் பாதியைக் கூட கொள்முதல் செய்ய முடியாது என்பதே உழவர்களின் கவலையாக உள்ளது.

மற்றொரு புறம் காவிரிப் பாசன மாவட்டங்களில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதலுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக வரும் உழவர்கள், தங்களின் நிலங்களுக்குரிய அசல் சிட்டா அடங்கலை கிராம நிர்வாக அதிகாரிகளிடமிருந்தும், நெல் விதைப்புத் தேதி, அறுவடை தேதி, நெல் ரகம் ஆகிய விவரங்கள் அடங்கிய சான்றிதழை வேளாண் விரிவாக்க உதவி அலுவலர்களிடமிருந்து வாங்கி வர வேண்டும்; இந்தச் சான்றிதழ்களை வாங்கி வராத உழவர்களின் நெல் கொள்முதல் செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. இவை நடைமுறை சாத்தியமற்ற, ஏற்றுக்கொள்ளவே முடியாத கட்டுப்பாடுகள் ஆகும்.

கிராம நிர்வாக அலுவலர்களும், வேளாண் விரிவாக்க அதிகாரிகளும் ஏற்கெனவே கடுமையான பணிச் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர். வரும் 15ஆம் தேதி விடுதலை நாளையொட்டி ஜமாபந்தி நிகழ்வு, பல்வேறு நலத்திட்டங்களுக்கான புள்ளிவிவரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களால் விவசாயிகள் கேட்கும் நேரத்தில் சான்றிதழ்களை வழங்குவது சாத்தியமற்றது. அதேபோல், கடந்த காலங்களில் ஒரு ஊராட்சி அல்லது இரு ஊராட்சிகளில் மட்டும் பணி செய்து வந்த வேளாண் விரிவாக்க உதவி அலுவலர்கள் இப்போது 5 ஊராட்சிகள் வரை கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்களிடம் சான்றிதழ்களைப் பெற உழவர்கள் குறைந்தது இரு வாரங்களாவது அலைய வேண்டியிருக்கும் என்பது மட்டுமின்றி, அதற்குப் பெரும் செலவும் செய்ய வேண்டியிருக்கும். அதை உழவர்களால் தாங்க முடியாது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வணிகர்கள் மொத்தமாக நெல்லை விற்பனை செய்கின்றனர் என்பதும், அதைத் தடுப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. உழவர்கள் விற்பனை செய்யும் கொள்முதல் நிலையங்களில், வணிகர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவது தவறு; இது தடுக்கப்பட வேண்டும் என்பதை பாமகவே பல முறை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், அதற்காக அரசு கடைப்பிடிக்கும் முறைதான் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

வணிகர்கள் வெளி இடங்கள், வெளி மாநிலங்களிலிருந்து நெல் மூட்டைகளை வாங்கி வந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். மாநில எல்லை மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து நெல் மூட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களை ஆய்வு செய்தாலே இந்த மோசடிகளைத் தடுத்துவிட முடியும். இந்த எளிமையான வழியை விடுத்து, சான்றிதழ்களை வாங்கி வரும்படி உழவர்களை அலையவிடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, நெல் கொள்முதல் செய்வதற்காக விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்; அதற்கு மாற்றாக வணிகர்கள் நெல் மூட்டைகளைக் கடத்தி வருவதைத் தடுக்க வேண்டும். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களையும் அரசு திறக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x