Last Updated : 11 Aug, 2021 03:08 PM

 

Published : 11 Aug 2021 03:08 PM
Last Updated : 11 Aug 2021 03:08 PM

வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேர்வு; முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் பணி நியமனம் தாமதம்: வெற்றி பெற்ற தேர்வர்கள் கலக்கம்

விழுப்புரம்

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பும், பணி நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தப்படுவதால் வெற்றி பெற்ற தேர்வர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் இணைய வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது.

தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தொலைதூரங்களுக்குப் பயணித்து சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினார்கள். பெரும்பாலும் தேர்வர்களுக்கான தேர்வு மையமானது அவர்களின் சொந்த மாவட்டத்தில் ஒதுக்கப்படாமல் பிற மாவட்டங்களிலேயே ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இணைய வழியில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் வழக்கமாக ஓரிரண்டு மாதங்களில் வெளியிடப்படும். ஆனால், வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வின் முடிவுகள் சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி 27-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கரோனா பரவலால் இப்பணிகள் தொய்வு அடைந்திருக்கலாம் எனக் கருதினாலும் இவற்றைக் கடந்து மற்ற அனைத்துப் பணியாளர் தேர்வு வாரியங்களும் செயல்படத் தொடங்கிவிட்டன.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வினை நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணையை கடந்த மாதமே வழங்கிவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 5 மாதங்களாக எவ்விதச் செயல்பாடும் இன்றி அமைதி காத்து வருகிறது.

தேர்வு நடந்து சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பணி நியமனம் தொடர்பான பணிகளைத் தொடங்காமல் காலம் தாழ்த்துவதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. இணையவழியில் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கமே தேர்வுப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால், இத்தேர்விற்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடானது அந்நோக்கத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தேர்வின் வெற்றியாளர்களுக்கு உடனடியாகச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை முடித்து அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x