Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

நீரஜ் சோப்ராவை போற்றும் வகையில் 100 மி.கிராம் தங்கத்தில் ஈட்டி எறியும் வடிவத்தை உருவாக்கிய தொழிலாளி

கோவை

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை போற்றும் வகையில் கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 100 மில்லி கிராம் தங்கத்தில் அவர் ஈட்டி எறியும் வடிவத்தை உருவாக்கியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை தொழிலாளி ராஜா (51), நீரஜ் சோப்ராவை போற்றும்வகையில், அவர் இறுதிப் போட்டியில் ஈட்டி வீசும்போது வெளியான படத்தை மாதிரியாக வைத்து 100 மில்லி கிராம் தங்கத்தில் ஈட்டி வீசும் வடிவத்தை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து, ராஜா ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “நாட்டின் தங்க மகனாக கொண்டாடப்படும் நீரஜ் சோப்ராவை தங்கத்தில் வடிவமைக்க வேண்டும் என, அவர் வெற்றி பெற்றவுடனேயே எண்ணி பணியைத் தொடங்கினேன். சுமார் 48 மணி நேரம் செலவிட்டு, அவர் ஈட்டி வீசிய காட்சியை உருவாக்கியுள்ளேன். மேலும் 100 மில்லி கிராம் தங்கம் சேர்த்து இந்திய நாட்டையும், ஒலிம்பிக் வளையங்களையும் உருவாக்கி, அதோடு இணைத்துள்ளேன். தங்கத்தில் உருவாக்கிய நீரஜ் சோப்ராவின் உருவத்தை அவருக்கே அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x