Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு (40). இவருக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து கடந்த 19-05-2021 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அலமேலு 22-05-21 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 'கரோனாவால் இறந்ததால் அலமேலுவின் உடலை கொடுக்க முடியாது; தாங்களே இறுதிச் சடங்குகளைச் செய்துவிடுவோம்' என கூறி உறவினர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
மறுநாள் மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு அலமேலு உடலை எரித்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலுவின் உறவினரை தொடர்பு கொண்டு. அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும், நேரில் வந்து உடலை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்றுசெங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் ஆர்.எம்.ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவமனையில், அலமேலுவின் உடலை காண்பிக்க ரூ.2,500 மற்றும் முகத்தை பார்க்க ரூ.500 லஞ்சம் வாங்கப்பட்டதாக அவரது உறவினர்கள் புகார்தெரிவித்தனர். இதற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் நிலையமருத்துவர் அனுபமா கூறும்போது, ‘‘நாங்கள் அலமேலு இறந்தது தொடர்பாக காஞ்சிபுரம் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால் அவர்கள் எந்தநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அலமேலுவின் உடலைப் பார்க்க லஞ்சம் பெற்ற விவரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
காஞ்சிபுரம் சுகாதாரத் துறையினர் கூறும்போது, ‘‘செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம்எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கரோனாவால் இறந்த தகவலை தெரிவித்திருந்தால் நாங்கள் முறையாக அடக்கம் செய்திருப்போம். மருத்துவமனை நிர்வாகம் செய்த தவற்றை மறைப்பதற்காக எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்’’ என்றனர்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் முத்துக்குமாரிடம் கேட்ட போது, ‘‘இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT