Published : 10 Aug 2021 09:40 PM
Last Updated : 10 Aug 2021 09:40 PM
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ல் நடத்திய கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்ததன் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்மரபினர் மற்றும் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஆணையம் பரிந்துரைத்தாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ல் நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளதாகவும், இதில் அரசியல் காரணங்களோ அவசரமோ ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற சாதியினர் இந்தச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே எனவும், குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாகக் கருத முடியாது எனவும், அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழக அரசு கோரியது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி ஆதிகேசவலு விலகுவதாக தெரிவித்ததை அடுத்து, வேறு நீதிபதியுடன் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என அறிவித்த தலைமை நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT