Published : 10 Aug 2021 07:56 PM
Last Updated : 10 Aug 2021 07:56 PM
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பட்டியல் இனத்தவர் பட்டியலின இன பெண்கள் மற்றும் பெண்கள் (பொது) ஆகிய இடஒதுக்கீடு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. வரும் 13ல் பிற்படுத்தப்பட்டவர், பட்டியல் இனத்தவர்களுக்கான ஒதுக்கீடு குலுக்கல் முறையில் தேர்வாகவுள்ளது.
புதுவை மாநிலத்தில் கடந்த 1968-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தொடர்ந்து 38 ஆண்டுகளாக புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதையடுத்து கடந்த 2006ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011 ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை உள்ளாட்சித்தேர்தல் நடக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் நடக்கின்றன.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் கூறுகையில், "புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது. வார்டு வாரியான தொகுதி மறுசீரமைப்புக்கு பின்வார்டு வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து பட்டியலினத்தவர், பட்டியலினப் பெண்கள் மற்றும் பெண்கள் (பொது) ஆகிய இட ஒதுக்கீடு அடங்கிய விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்டவர் மற்றும் பட்டியலின இனத்தவர்களுக்கான ஒதுக்கீடு வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் (www.sec.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலுவலக நேரங்களில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேரில் சென்று பார்வையிடலாம். " என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT