Published : 10 Aug 2021 11:08 AM
Last Updated : 10 Aug 2021 11:08 AM

பழிவாங்கும் நோக்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; அதிமுகவை அழிக்க முடியாது: ஜெயக்குமார்

ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

அதிமுகவைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக சோதனை நடத்தப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனங்களுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்பந்த திட்டப் பணிகள் கொடுக்கப்படுவதாகவும், மற்ற ஒப்பந்த நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவுக்கு வந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர், அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி ஊழல்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாாிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் சமீபத்தில் புகார் அளித்தார். தவிர, அதிமுக ஆட்சியில் ஒப்பந்தப் பணி பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக, கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸில் நேற்று (ஆக. 09) புகார் அளித்து இருந்தார்.

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் பி.கங்காதரன் சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் இன்று (ஆக. 10) லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 52 இடங்களில் சோதனை நடக்கிறது.

இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆளுங்கட்சி என்ற மமதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அடிப்படையில், இதுபோன்ற ரெய்டுகளை நடத்துகின்றனர். அதிமுக எத்தனையோ அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறது.

காவல்துறையை விட்டு கட்சியை அழிக்கலாம் என்ற வகையில், கடந்த காலங்களில் பல செயல்கள் நடந்தன. அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறவில்லை. இது ஜனநாயக நாடு. நீதிமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகத்துறை, பத்திரிகை துறை எல்லாம் இருக்கின்றன. நீதிமன்றத்தில் எங்கள் கருத்துகளை எடுத்துவைப்போம். நிச்சயமாக அன்றைக்கு நிரபராதி என்ற நிலை ஏற்படும்.

இன்றைக்கு மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக, அதிமுகவைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சி கொண்டு, ரெய்டுகள் மூலம் களங்கம் ஏற்படுத்த நினைத்தால், நிச்சயமாக அது நடக்காது.

புகார்கள் இருந்தால் அதனை நீதிமன்றம் விசாரித்து உண்மை இருந்தால் தண்டனை கொடுக்கும். நீதிமன்றம் இருக்கும் நிலையில், காவல்துறையை ஏவிவிட்டு கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாகத்தான் இதனைப் பார்க்க முடியும். நீதிமன்றத்திலேயே அரசு தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கலாமே.

உயிரை விட மானம் பெரிது. அப்படியிருக்கும்போது காவல்துறையை வைத்து ரெய்டு நடத்துகின்றனர். நீதிமன்றத்திலேயே தங்கள் ஆதாரங்களைக் கொடுத்திருக்கலாமே. சமூக விரோதி போன்று அவ்வளவு காவல்துறையினரைக் கூட்டி கட்சியின் இமேஜை பாதிக்கும் வகையில் இதனைச் செய்கின்றனர். அதிமுகவை அழிக்க முடியாது. இந்தச் செயல்கள் எல்லாம் வீண்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x