Published : 10 Aug 2021 10:38 AM
Last Updated : 10 Aug 2021 10:38 AM
மத்திய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன என்று, சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''பொதுத்துறை நிறுவனங்களின் லாபகரமான செயல்பாடு, பங்கு விற்பனை பற்றிய கேள்விகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் மக்களவையில் நேற்று (ஆக.10) எழுப்பியிருந்தார்.
அக்கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத், 171 பொதுத் துறை நிறுவனங்கள் 2019- 20 ஆம் நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாகவும், அவற்றில் 10 'மகாரத்னா'க்கள், 14 'நவ ரத்னா'க்கள், 73 'மினி ரத்னா'க்கள் உள்ளன என்றும், அவற்றில் 'மகாரத்னா'வாக உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், 'மினி ரத்னா'க்களாக உள்ள ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா, 'மினி ரத்னா' நிறுவனங்களான பாரத் எர்த் மூவர் லிமிடெட், பவான் ஹான்ஸ் லிமிடெட் ஆகியன கேந்திர விற்பனை வாயிலாகத் தனியாருக்கு விற்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், "அமைச்சரின் பதில்கள் பொதுத்துறை நிறுவனங்களின் நல்ல செயல்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. தனியார் மயம், பங்கு விற்பனைக்கான நியாயங்களாக எப்போதுமே அரசாங்கம் கூறுவது என்ன? நஷ்டத்தில் இயங்குகிறது என்பதே.
மக்கள் வரிப் பணத்தை குழியில் போட முடியுமா போன்ற வழக்கமான வசனங்கள் வேறு. ஆனால், அமைச்சர் பதிலில் 171 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன என்பது மட்டுமின்றி, 97 நிறுவனங்கள் 'ரத்னா'க்களாக உள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மினி ரத்னா' என்றால் மூன்று ஆண்டு தொடர் லாபம், 'நவரத்னா' எனில் மூன்று ஆண்டு லாபத்தோடு இன்னும் ஏழெட்டு அளவுகோல்களில் சிறப்பான செயல்பாடு, 'மகா ரத்னா' என்றால், ரூ.5,000 கோடிகளுக்கு மேல் லாபம் என்று பொருள்.
ஆனால், இந்த 'ரத்னா'க்களும் தனியாருக்கு விற்கப்படும் என்றால், இவர்கள் சொல்லி வந்த நஷ்டக் கதையாடல் என்ன ஆனது? ஆட்சியாளர் சொல்வது போல குழிகளில் பணம் போடப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்களே தங்கக் குழிகளாக உள்ளன என்பதே உண்மை என்பது இப்பதிலில் தெளிவாகிறது. எதற்காகத் தனியார் மயம்?" என்று சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்''.
இவ்வாறு சு.வெங்கடேசன் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT