Published : 04 Jun 2014 09:43 AM
Last Updated : 04 Jun 2014 09:43 AM
ஒரே நாளில் யூஜிசி நெட் தேர்வும், டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வும் நடப்பதால் எந்தத் தேர்வை எழுதுவது என்பது தெரியாமல் தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதித்தேர்வு (நெட்) ஜூன் 29-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பதவிகளில் 2,846 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-2-ஏ தேர்வும் அதே நாளில் (ஜூன் 29) நடத்தப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்கின்றனர்.
முதலில் மே 18-ம் தேதி நடத்தப்படுவதாக இருந்த தேர்வு மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. குரூப்-2-ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கணிசமான தேர்வர்கள் யூஜிசி நெட் தகுதித்தேர்வுக்கும் விண்ணப்பித் துள்ளனர். அகில இந்திய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வை தள்ளிவைப்பது என்பது சிரமம். எனவே, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குரூப்-2-ஏ தேர்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு டிஎன்பிஎஸ்சி-க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக, தகுந்த காரணங்களை முன்வைத்து தேர்வு தேதியை மாற்றுவது தொடர்பாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், அதுகுறித்து டிஎன்பிஎஸ்சி பரிசீலனை செய்து தேர்வு தேதியை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT