Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

60 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை மைசூருவில் வைத்திருப்பது ஏன்?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை

கர்நாடகம் - தமிழகம் இடையே காவிரி பிரச்சினை இருந்து வரும் நிலையில், தமிழ் மொழியுடன் தொடர்புடைய 60 ஆயிரம் கல்வெட்டுகளை மைசூருவில் வைத்திருப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகைகளில் அகழாய்வு நடத்தக் கோரியும், மதுரை சமணர் படுகைஉள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் முத்தாலங்குறிச்சியை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள், என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அந்த உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு சார்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், "மத்திய அரசுகல்வெட்டியியல் துறையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கல்வெட்டுகளில் சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியுடன் தொடர்புடையது. அந்த கல்வெட்டுகளை மைசூருவில் ஏன் வைத்திருக்க வேண்டும்? கர்நாடகம் - தமிழகம் இடையே காவிரி பிரச்சினை இருக்கும் நிலையில் தமிழ் கல்வெட்டுகளை கர்நாடகத்தில் வைத்திருப்பது ஏன்?

மத்திய அரசின் அறிக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்குகல்வெட்டியியலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேவை என்ன" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில், அது மத்திய அரசின் கொள்கை முடிவு என பதிலளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "எந்த நடவடிக்கைகளும் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக் கூடாது. அனைத்து மொழிகளும் முக்கியமானவை. மொழிகளின் முக்கியத்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்" என தெரிவித்தனர். பின்னர்,தொல்லியல் துறையில் 758 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தர வேண்டும். தொல்லியல் துறையின் கல்வெட்டியியல் பிரிவு அலுவலர் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x