Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM
சென்னை வடபழனியில் 800 படுக்கை வசதியுடன் மகளிர் தங்கும் விடுதி அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அதிகாரி தெரிவித்தார்.
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளை செய்துதரும் வகையில் கடந்த 2014- ல் பணிபுரியும் பெண்களுக்கான அரசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
பெரம்பூர், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, சேலையூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 28 அரசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
விடுதிகளில் தங்குவதற்கு மாத வாடகையாக சென்னையில் ரூ.300, மாநிலத்தின் பிற இடங்களில் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விடுதிகளில் சேருவதற்கு தகுதியான மாத வருமான உச்சவரம்பு சென்னையில் ரூ.25 ஆயிரம், மாநிலத்தின் பிற இடங்களில் ரூ.15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
கட்டணம் குறைவாக இருந்ததால் ஆரம்பத்தில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் சேர்ந்தனர். ஆனால், உணவு, இருப்பிடம் உள்ளிட்டவற்றில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், பெண்களின் வருகை குறைந்தது.
எனவே, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம், தனியார் விடுதிகளுக்கு இணையாக அவற்றை தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் 800 படுக்கை வசதியுடன் கூடிய மகளிர் விடுதியைக் கட்ட சமூகநலத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``சென்னை வடபழனியில் உள்ள, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மகளிர் தங்கும் விடுதியை அமைக்க முடிவு செய்துள்ளோம். 800 படுக்கை வசதியுடன் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளது.
தற்போது, இதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிதியைப் பெற்று, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் விடுதி கட்டத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT