Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM

குழந்தைகள் தொழிலாளர் பயிற்சி மைய ஆசிரியர்கள் 18 மாதங்களாக ஊதியமின்றி தவிப்பு: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூடங்குளம் பகுதி தற்காலிக செவிலியர்கள்.படம்: மு. லெட்சுமி அருண்.

திருநெல்வேலி/ தென்காசி

தேசிய குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் தங்களுக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்காக, முறைசார் பள்ளியில் பயின்று இடைநிற்றல் காரணமாக வேலைக்குசென்ற குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொடக்க கல்வி பயிற்றுவித்து, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகதேசிய குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பயிற்சி திட்டம் மத்தியஅரசின் நிதி உதவியுடன் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு பள்ளிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 20-க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 18 மாதங்களாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கான வாடகை கட்டணத்தையும் வழங்கவில்லை. இந்த வாடகை கட்டணத்தையும் ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்தவிவகாரத்தில் தலையிட்டு ஊதியம்கிடைக்கவும், வாடகை கட்டணத்தை செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கழிவுநீர் கால்வாய்

திருநெல்வேலி சங்கர்நகர் அருகே அருணாசல நகரைச் சேர்ந்தவர்கள் , ``நாரணம்மாள்புரம் தேர்நிலை பேரூராட்சி சார்பில் அருணாசலநகரில் அமைக்கப்பட்ட கழிவுநீர்வடிகாலை திடீரென்று சிலர் அடைத்துவிட்டதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது’ என்று கூறி மனு அளித்தனர்.

மானூர் ஊராட்சி ஒன்றியம் நரசிங்கநல்லூர் முப்பிடாதிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள், `இப்பகுதியில் மத்திய அரசு திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வாறுகால் பணிகள் அரைகுறையாக உள்ளன.பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை புதுப்பிக்க வேண்டும்’ என்று கோரி மனு அளித்தனர்.

பாளையங்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சி தலைவர் எம். மின்னத்துல்லா உள்ளிட்டோர், `திருநெல்வேலி மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் குழந்தைகள் அவசரப் பிரிவில் கடந்த 7-ம்தேதி இரவில் மின்தடை ஏற்பட்டது.இங்கு இன்வெர்ட்டர் வசதி இல்லை. ஜெனரேட்டரும் இயக்கப்படாததால் குழந்தைகள் மிகவும் அவதிபட்டனர். மின்தடை ஏற்பட்டால் உடனடியாக ஜெனரேட்டர் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கோரி மனு அளித்தனர்.

கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி

வள்ளியூர் காமராஜர் சமூகநல பேரவை தலைவர் நா. நற்றமிழன், `கரோனா காலத்தில் மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோஅரிசி கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் அரிசிஇருப்பு இல்லை என்று தெரிவிக்கிறார்கள். கள்ளச் சந்தையில் ரேஷன் அரிசி விற்கப்படுவதை தடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அரசு மருத்துவமனை தற்காலிக செவிலியர்கள், `கூடங்குளம் அரசு மருத்துவமனையில் கடந்த 18.5.2021 முதல் கரோனா பிரிவில் செவிலியராக பணியாற்றி வந்தோம். தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பணிநிறுத்தம் செய்துள்ளதால் வாழ்வாதாரமின்றி தவிக்கிறோம்.

எனவே, மீண்டும் நாங்கள் பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி மனுஅளித்தனர்.

தென்காசியில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அடுத்தடுத்து 3 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (31) என்பவர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது அவர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து விசாரணை நடத்தினர். ‘தனது வீட்டுமனையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

இதேபோல், வால்பாறையைச் சேர்ந்த தனம் என்ற பெண் தென்காசி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர் அளித்துள்ள மனுவில், ‘கணவரைப் பிரிந்த தனக்கு, நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜீவனாம்சம் வழங்காததால், அவரது சொத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இடத்தை தராமல் மறுக்கிறார். அந்த இடத்தை மீட்டுத் தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஆலங்குளம் வட்டம், துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் முத்துமாரி என்பவரும், பூர்வீக நிலப் பிரச்சினை காரணமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அடுத்தடுத்த 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x