Last Updated : 09 Aug, 2021 08:24 PM

3  

Published : 09 Aug 2021 08:24 PM
Last Updated : 09 Aug 2021 08:24 PM

அதிமுகவைவிட 2 மடங்கு அதிகம்; 90 நாட்களில் 1.80 கோடி தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

திருச்சி

90 நாட்களே ஆன திமுக ஆட்சியில் 1.80 கோடி கரோனா தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளது மிகப் பெரிய சாதனை என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையைப் பெற்று, சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து முதல்வர் விவாதித்து வருகிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையிலான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

நீட் தேர்வெழுத விண்ணப்பிப்பதற்கான காலம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான, தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கோவாக்சின் இட்டுக் கொண்டவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியும் இட்டுக் கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் முடிவெடுத்து, தடுப்பூசி குழுவுக்குத் தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாகத் தடுப்பூசி குழு அறிவித்தபிறகு தமிழ்நாட்டில் முறையாகச் செயல்படுத்தப்படும்.

மருத்துவத் துறையில் தற்காலிக அடிப்படையில் 30,000 பேர் உள்ள நிலையில் அவர்களை நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. கரோனா காலத்துக்குப் பிறகு எங்கெங்கு எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன. எந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் என்றெல்லாம் ஆய்வு செய்து, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் முதல்வரின் அறிவுரையின்படி நல்ல தீர்வு எடுக்கப்படும்.

மத்திய அரசு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் உட்பட மொத்தம் 72 லட்சம் தடுப்பூசிகளே முதலில் தருவதாக இருந்தது. ஆனால், கரோனா தடுப்பூசி இடுவதில் கடந்த 2 மாதங்களாகத் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதைப் பாராட்டி, ஜூலை மாதத்தில் 19 லட்சம் தடுப்பூசிகளைக் கூடுதலாக அளித்துள்ளது.

இந்த ஆகஸ்ட் மாதம் 79 லட்சம் தடுப்பூசிகளைத் தருவதாகக் கூறியுள்ளது. கடந்த மாதத்தைப் போலவே ஆகஸ்ட் மாதத்திலும் சிறப்பான செயல்பாடு இருக்கும். மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளைத் தரும் என்று கருதுகிறோம். தமிழ்நாட்டில் இதுவரை 2,32,87,240 தடுப்பூசிகள் வரப்பெற்று 2,32,30,231 தடுப்பூசிகள் இடப்பட்டு, இன்று காலை நிலவரப்படி 7,06,196 தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்தன.

இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் 20 நாட்களுக்கு முன்புவரை 4.50 லட்சம் தடுப்பூசிகள்தான் வாங்கப்பட்டிருந்தன. முதல்வரின் அறிவுறுத்தலுக்கேற்ப 20,47,560 தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கியுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 17,16,562 தடுப்பூசிகள் இடப்பட்டு, 3,30,998 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது நாள்தோறும் 2.50 லட்சம் முதல் 3 லட்சம் தடுப்பூசிகள் வரை இடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை இடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 2,49,46,763. அதிமுக அரசு 2021 ஜன.16-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை 103 நாட்கள் கரோனா தடுப்பூசி இடும் பணியை மேற்கொண்டது. இந்த நாட்களில் அதிமுக அரசு சார்பில் 74 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இடப்பட்டிருந்தன. 90 நாட்களே ஆன திமுக ஆட்சியில் 1.80 கோடி தடுப்பூசிகள் இடப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனை’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, கரோனா காலத்தில் மூளைச் சாவு அடைந்த சமயபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜின் சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானம் பெறப்பட்டு 3 பேருக்கு பொருத்தப்பட்டன. இதையொட்டி, செல்வராஜின் குடும்பத்தினருக்கு நினைவுக் கேடயம், சான்றிதழ் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x