Published : 09 Aug 2021 07:05 PM
Last Updated : 09 Aug 2021 07:05 PM
தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கரோனா காலத்தில் அதிகரித்துள்ளது.
ரேபிஸ் பாதிப்புள்ள நாய் கடித்தால் ஏற்படும் நோய்க்கு சிகிச்சை இல்லை. ரேபிஸ் பாதிப்பு வந்தால் இறப்பு நிச்சயம். கடந்த 2019-ம் ஆண்டு நாய் கடித்து ரேபிஸ் நோயால், ஒரு குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டே நாட்களில் உயிரிழந்துவிட்டது.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவனையில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் நாய் கடித்து அதிக பாதிப்பு ஏற்பட்ட 350 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவுத் தலைவர் பூமா கூறும்போது, ’’நாய் கடித்தால் ஏற்படும் லேசான காயம், பல் பட்டது, பிறாண்டியது போன்றவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசியை 5 முறை செலுத்த வேண்டும். நாய் கடித்து பலமாக அடிபட்டவர்கள், ரத்த காயம் ஏற்பட்டவர்களுக்கு 'ரேபிஸ் இம்யுனோகுளோபுளின்' ஊசி செலுத்த வேண்டும். 2020-ம் ஆண்டில் மட்டும் நாய் கடித்து கடுமையாக பாதிக்கப்பட்ட 12 வயதுக்குக் கீழ் உள்ள 350 குழந்தைகளுக்கும், சாதாரணக் காயத்துக்காக 150 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் இம்யுனோகுளோபுளின் ஊசி செலுத்த ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். நாய் கடித்த 6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி உள்ளது. குழந்தைகளை நாய் கடித்துவிட்டது, பிறாண்டியது எனச் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி அதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
செயல்படாத கருத்தடை மையம்
கோவை மாநகராட்சியின் மேற்கு, வடக்கு மண்டலங்களை உள்ளடக்கிய 40 வார்டுகளில் பிடிப்படும் நாய்களுக்கு சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள மையத்தில் கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. ஒண்டிபுதூரில் உள்ள மற்றொரு கருத்தடை மையம் தற்போது செயல்பாட்டில் இல்லை.
மாநகராட்சியின் உதவியோடு சீரநாயக்கன்பாளையம் மையத்தை நடத்தி வரும் 'ஹியூமன் அனிமல் சொசைட்டி' நிர்வாக அறங்காவலர் மினி வாசுதேவன் கூறும்போது, “மாநகராட்சியின் 40 வார்டுகள் தவிர எஞ்சியுள்ள 60 வார்டுகளில் தெருநாய்களைப் பிடித்துக் கருத்தடை செய்யும் பணி சுமார் 5 ஆண்டுகளாக பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், உணவுக் கழிவு மேலாண்மை சரியாக இல்லாததும் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். வீட்டில் வளர்க்கும் நாய்க்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், பலர் அதைச் செய்வதில்லை"என்றார்.
எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றுக்குக் கருத்தடை செய்யும் பணியை 3,4 மாதங்கள் தொடர்ந்து தினந்தோறும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கெல்லாம் நாய்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதோ அங்கும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், புகார் வரும் பகுதிகளில் உள்ள நாய்களை பிடித்து இந்தப் பணி நடைபெறும். தினமும் சுமார் 100 முதல் 200 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும். அதோடு, பிடிபடும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும். தன்னார்வ அமைப்பினர் மூலம் இந்த பணி நடைபெறும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT