Last Updated : 09 Aug, 2021 06:17 PM

 

Published : 09 Aug 2021 06:17 PM
Last Updated : 09 Aug 2021 06:17 PM

5 சாலை விபத்துகளுக்கு மேல் ஏற்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

திருச்சி

தமிழ்நாட்டில் 5 சாலை விபத்துகளுக்கு மேல் நடைபெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்து, விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரப் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் மற்றும்- சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் தீரஜ் குமார், சென்னை- கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தின் திட்ட இயக்குநர் கா.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை- இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் ஆகியோர் பேசினர்.

நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர்கள் இரா.சந்திரசேகர் (கட்டுமானம்- பராமரிப்பு), ந.பாலமுருகன் (தேசிய நெடுஞ்சாலை), இரா.கீதா (நபார்டு- கிராமச் சாலைகள்), எம்.முருகேசன் (திட்டங்கள்) மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தினேஷ் பொன்ராஜ் (தஞ்சாவூர்), அ.அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), இரா.லலிதா (மயிலாடுதுறை) மற்றும் 6 மாவட்டங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

''பொதுப்பணித் துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் 46 பணிகள் ரூ.113.17 கோடியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 142 பணிகள் ரூ.155.67 கோடியிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 37 பணிகள் ரூ.50.6 கோடியிலும், திருவாரூர் மாவட்டத்தில் 57 பணிகள் ரூ.43.11 கோடியிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 பணிகள் ரூ.134.27 கோடியிலும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மீண்டும் பரவினால் அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளைப் பொருத்தும் பணியைப் பொதுப்பணித் துறையினர்தான் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 1,651, புதுக்கோட்டை மாவட்டத்தில் 700, தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,571, திருவாரூர் மாவட்டத்தில் 926, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 705, மயிலாடுதுறை மாவட்டத்தில் 977 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித் துறை சார்பில் கட்டிடம் கட்டும்போது தண்ணீர், மணல், சிமென்ட், ஜல்லி, எம்-சாண்ட், கம்பி, கான்கிரீட்டின் தரம் ஆகியவற்றின் தரத்தைப் பரிசோதனை செய்வதுடன், ஆய்வறிக்கையை பணிக் களத்தில் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், உயரலுவலர்கள் ஆய்வின்போது அதை அவர்கள் பார்வைக்குக் காண்பிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன்.

முதல்வரின் அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள 2 வழிச் சாலைகளை 4 வழிச் சாலையாகவும், 4 வழிச் சாலைகளை 6 வழிச் சாலையாகவும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. சாலைப் பணிக்காக அப்புறப்படுத்தப்படும் மரங்களுக்குப் பதிலாக சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கவும், 5 விபத்துகளுக்கு மேல் நடைபெற்ற பகுதிகளை வட்டாரப் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விபத்துத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உயர்நிலைப் பாலங்கள் அமைக்க வேண்டும் என்று உள்ளூர் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு செல்லப்பட்டு, இந்தக் கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது நல்ல அறிவிப்புகள் வரும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 245 தரைமட்டப் பாலங்களை, மேம்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பல ஆண்டுகளாக ரயில்வே பாலப் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. அந்தப் பணிகளை விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைப் பணிகளில் நிலவும் தாமதங்களைத் தவிர்க்கும் வகையில், சாலைக்கான நிலமெடுப்பு, இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கெனத் தனியாக மாவட்ட வருவாய் அலுவலர்கள் 5 பேர், ஓரிரு நாட்களில் நியமிக்கப்படவுள்ளனர்.

கிராமச் சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளின் தரத்துடன் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் 10,000 ஊராட்சி ஒன்றியச் சாலைகளைத் தேர்ந்தெடுத்து தரமான சாலைகளாக அமைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இதற்கெனத் தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பூம்புகார் சுற்றுலாத் தலம் பராமரிப்பின்றிக் கிடப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உரிய நடடிக்கை எடுக்கப்படும்.

முக்கொம்பு கொள்ளிடம் மேலணை கட்டும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். ஜங்ஷன் மேம்பாலத்துக்கு வழங்கவுள்ள இடத்துக்கு மாற்று இடம் அல்லது உரிய தொகை ஆகியவற்றில் எது வேண்டும் என்று கடிதம் அனுப்புவதாகப் பாதுகாப்பு அமைச்சக அலுவலர்கள் கூறியுள்ளனர். கடிதத்தை எதிர்நோக்கியுள்ளோம். கடிதம் வந்தவுடன் பாலப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்''.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x