Published : 09 Aug 2021 05:02 PM
Last Updated : 09 Aug 2021 05:02 PM
தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தும் தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டன்ம் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் அரசின் நிதி நிலைமை, வரி வருவாய், கடன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாகவது:
''தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.
அப்படி ஒரு முடிவினைத் திமுக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல' அமைந்துவிடும்.
அதற்கு பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.1 லட்சம் கோடியை அதற்குக் காரணமானவர்களிடம் இருந்து மீட்டெடுக்கும் வேலையைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். அப்படிச் செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டுப் பாசத்தில் திமுக அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.
எனவே, யாரோ சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்றத் தமிழக அரசு முயலக் கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்''.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT