Last Updated : 09 Aug, 2021 04:28 PM

 

Published : 09 Aug 2021 04:28 PM
Last Updated : 09 Aug 2021 04:28 PM

திருநள்ளாற்றில் எனது பேட் எனது உரிமை திட்டம் தொடக்கம்

திருநள்ளாற்றில் எனது பேட் எனது உரிமை திட்டத்தைத் தொடங்கி வைத்து, சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தைப் பார்வையிட்ட புதுச்சேரி அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் (நடுவில்), உடன் எம்.எல்.ஏ பி.ஆர்.சிவா உள்ளிட்டோர்.

 காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், பெண்களுக்கான நாப்கினை பெண்களே தயாரிக்கும் வகையிலான 'எனது பேட் எனது உரிமை' (My pad My right) என்ற திட்டத்தை புதுச்சேரி அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் இன்று (ஆக.9) தொடங்கி வைத்தார்.

நபார்டு வங்கி உதவியுடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் தொடக்க விழா, திருநள்ளாறு அம்பேத்கர் நகர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா தலைமை வகித்தார். புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசும்போது, "எனது துறை சார்பில் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பெண்களுக்கு முழுச் சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புகளும் அளிக்கக் கூடிய நாடு வல்லரசாகத் திகழும். பெண்களுக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் நாடு பெருமை குன்றிய நாடாக இருக்கும். வீட்டுக்கும் இது பொருந்தும். பெண்கள் தங்களுக்கான தேவைகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனது துறை சார்பில் மகளிர் வளர்ச்சிக்கான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்" என்றார்.

மாவட்டத் துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அதிகாரி டி.தயாளன், நபார்டு வங்கி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டம் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "நபார்டு வங்கி உதவியுடன் இந்தியாவில் மொத்தம் 30 மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் காரைக்கால் மாவட்டமும் ஒன்று. சுகாதாரமான முறையில் கிராமப்புற பெண்கள் நாப்கின் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தங்களுக்கான சானிட்டரி நாப்கின்களை பெண்களே தயாரிக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டு, அதன் மூலம் திருநள்ளாறு அம்பேத்கர் தையல் வல்லுநர்கள் குழு மகளிர், இயற்கையான (ஆர்கானிக்) முறையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்க உள்ளனர்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x