Published : 09 Aug 2021 02:39 PM
Last Updated : 09 Aug 2021 02:39 PM
இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கக் கூடாது என, முதல்வருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்து மதத்தைப் பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்தபிறகே, இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (ஆக.09) விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது.
முக்கியப் பதவிகளை வகிப்பவர்கள் பதவியேற்கும்போது, கடவுள் பெயரிலோ, அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியலமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
எந்த மதமும் குறுகிய மனப்பான்மையைப் போதிக்கவில்லை எனவும், பிற மதத்தினரைப் புண்படுத்தக் கூறவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தத்தல்ல எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல், பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT