Published : 09 Aug 2021 02:17 PM
Last Updated : 09 Aug 2021 02:17 PM
தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் நேற்று (08.08.2021) கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக, சென்னையில் 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 345 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முகக்கவசம் அணியாத 753 நபர்கள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 07 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.05.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தமிழக அரசு 21.06.2021 காலை முதல் 23.08.2021 வரை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், முறையான தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு பணிகளைத் தீவிரப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகனத் தணிக்கைச் சாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து, தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் குழுவினர் நேற்று (08.08.2021) மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் கரோனா ஊரடங்கு தடையை மீறியது தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 331 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 ஆட்டோக்கள் என மொத்தம் 345 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முகக்கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 753 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 07 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து கரோனா தொற்றைத் தடுக்க வேண்டும்''.
இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT