Last Updated : 09 Aug, 2021 01:18 PM

1  

Published : 09 Aug 2021 01:18 PM
Last Updated : 09 Aug 2021 01:18 PM

10,000 அரசுப் பணியிடங்கள் காலி: புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சுயேச்சை எம்எல்ஏ முடிவு

புதுச்சேரி

10,000 அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதால், வயது வரம்பைத் தளர்த்தி அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால், இளைஞர்களைத் திரட்டி புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளதாக சுயேச்சை எம்எல்ஏ நேரு தெரிவித்தார்.

புதுவையில் பல ஆண்டுகளாக அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாததால் மக்களின் அடிப் படை, அத்தியாவசியப் பணிகள் கூட நடைபெறவில்லை. ஒவ்வொரு துறையிலும் 3-ல் ஒரு பங்கு பணியிடம் என 10,000 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் புதுவை உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அரசு ஊழியர்கள் பலர் விடுப்பில் செல்வதால் அலுவலகத்தில் பணி செய்ய ஆட்கள் இல்லை. தயாரிக்கப்பட்ட கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் புதுவையின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. அதிகாரிகள் பணிச்சுமைக்கு ஆளாவதால் பொதுமக்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.

புதுவையில் 10,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்பாததால் படித்த இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியிடங்களை நிரப்பாததால் பட்டதாரி இளைஞர்கள் வயது வரம்பைக் கடந்துள்ளனர். அங்கன்வாடி ஊழியர் பணிக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள்.

கரோனா தாக்கத்தால் பல வீடுகளில் வருவாய் ஈட்டிய ஆண்கள் இறந்ததால், விதவைப் பெண்கள் ஆதரவற்று நிற்கின்றனர். இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசுப் பணிக்கு வயது வரம்பை 5 ஆண்டுகள் கூட்டி இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

வருவாய் ஈட்ட முடியாமல் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்துள்ளனர். சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் கஞ்சா விற்பனை, செயின் பறிப்பு, வாகனத் திருட்டு போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. சமூக விரோதிகள் இளைஞர்களை மூளைச் சலவை செய்து கள்ளச்சந்தை, கந்துவட்டி தொழிலுக்கு அடியாட்களாக, கூலியாட்களாகப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சூழலைக் களைய வயது வரம்பைத் தளர்த்தி, உடனடியாக அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு இதில் மெத்தனம் காட்டினால் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்".

இவ்வாறு சுயேச்சை எம்எல்ஏ நேரு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x