Published : 09 Aug 2021 11:25 AM
Last Updated : 09 Aug 2021 11:25 AM

ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணையமாட்டார்; அது தவறான செய்தி: ஈபிஎஸ் பேட்டி

எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சேலம்

ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறார் என்பது தவறான செய்தி. அவர் இணையமாட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக. 09) வெளியிட உள்ளார்.

இந்நிலையில், சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:

"வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 2011-ம் ஆண்டு ரூ. 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனை திமுக அரசு விட்டுச் சென்றது. அந்தக் கடன் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. வாங்கப்பட்ட கடனில் பாதிக்கும் மேலாக மூலதனமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களும் வளர்ச்சிக்காகக் கடன் வாங்க வேண்டியுள்ளது.

மாநிலம் வளர்ச்சி பெற வேண்டும் என்றால், அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்குக் கடன் பெறுவது அவசியமாகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் கடன் பெற்றுத்தான் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் கடந்த அதிமுக அரசு கடன் பெற்றது. திமுகவும் அதன் ஆட்சியில் கடன் பெற்றிருக்கிறது.

இன்னும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால், மின்சாதனங்களின் விலை உயர்ந்துவிட்டது. நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்ந்துள்ளது. நிலக்கரியைக் கொண்டு வரும் டிரான்ஸ்ஃபர் விலை உயர்ந்துள்ளது. ஆயில் விலை உயர்ந்துள்ளது. மின்சாதனங்களின் விலை உயர்ந்தும் மின்கட்டணத்தை உயர்த்தாததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகத்திலும் அப்படித்தான். டீசல் விலையேற்றத்துக்கு ஏற்றவாறு கட்டணத்தை ஏற்றவில்லை. இப்படிப்பட்ட நிலை இருப்பதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் நஷ்டம் ஏற்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறார் என்பது தவறான செய்தி. அவர் இணையமாட்டார். என்னிடம் பேசினார். பணி நிமித்தமாக டெல்லி சென்றுள்ளார். அவதூறான செய்தியைப் பரப்புகின்றனர். அதிமுகவில் தொடர்ந்து இருக்கிறார். அதிமுக மீது அவர் பற்று கொண்டவர்.

அதிமுக அவைத்தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.

மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தி உள்ளோம். மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் ஏரிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். திமுக அரசு இதனை நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்".

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x